Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சேலம் வரும் முதல்வர் அரசு மருத்துவமனையைப் பார்ப்பதில்லை!’ - கொந்தளிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்


'டெங்குக் காய்ச்சல் காரணமாக தமிழகம் முழுவதும் பல உயிரிழப்புகள் நேர்ந்து வருகிறது. அதைத் தடுக்க துப்பில்லாமல் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது'' என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஊர்வலமாக வந்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், சேலம் மாவட்ட மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தின்  கேட்டை இழுத்துச் சாத்தி பூட்டுப் போட முயற்சி செய்தார்கள். அதையடுத்து மாதர் சங்கத்தைச் சேர்ந்த 9 பெண்கள் உட்பட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 72 பேர் கைதானார்கள்.  

இதுபற்றி மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசெளந்தரி, ''சேலத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்குக் காய்ச்சல் இருந்து வருகிறது. டெங்குக் காய்ச்சலுக்குப் பலர் பலியாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே அதிக உயிரிழப்பு முதல்வர் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சேலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு செயல்படாத அரசாக இருந்து வருகிறது.


சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்குக் குறைந்தது 5 குழந்தைகள் மரணம் அடைகிறார்கள். டெங்குக் காய்ச்சலுக்குப் பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்து வருவது ரொம்ப வேதனையாக இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் இதைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளுவது போல தெரியவில்லை. அதையடுத்துதான் இந்த முற்றுகை போராட்டம் நடத்தினோம்'' என்றார்.

அதையடுத்து பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரவின், ''தமிழ்நாட்டிலேயே அதிக உயிரிழப்பு சேலம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. சேலத்திற்கு வாரம் தோறும் வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு மருத்துவமனைக்கு ஒரு முறை கூட விசிட் வராமலேயே போகிறார். அரசு மருத்துவமனையில் ஒரு பெட்டிற்கு 3 குழந்தைகளை படுக்க வைக்கிறார்கள். தற்போது அனைத்து பெட்டிலும் ஆட்கள் இருப்பதால் தரையில் பாய் போட்டு படுக்க வைக்கிறார்கள்.

ஒரு பாயில் 3 குழந்தைகள் படுக்க வைத்திருக்கிறார்கள். மருத்துவமனைக்குள் கழிப்பிட வசதி இல்லை, குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. 3 வார்ட்களுக்கு 2 நர்ஸூகளை நியமித்து இருக்கிறார்கள். மருத்துவமனையில் உள்ள மருந்துகளைக் களவாடிச் சென்று வெளியில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் முதல்வர் மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் இந்த நாட்டின் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியும். மருத்துவமனை நிர்வாகம் சற்று துரிதமாக வேலை பார்ப்பார்கள். ஆனால், மருத்துவமனைக்கு வந்தால் முதல்வருக்கு டெங்குக் காய்ச்சல் ஒட்டிக் கொள்ளும் என்று பயந்து கொண்டு வரவில்லை போலத் தெரிகிறது. இவரை எப்படி மக்களுக்கான தலைவராகப் பார்க்க முடியும்.

டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியாத வக்கற்ற அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேலத்தில் டெங்குக் காய்ச்சலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். டெங்குக் காய்ச்சலால் இறந்து போன ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் வழங்க வேண்டும்'' என்றார்.

இவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போதே  சேலம் மரவனேரி கோர்ட் ரோடு காலனிப் பகுதியைச் சேர்ந்த ரக்க்ஷிதா என்ற பத்து வயது சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close