Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சருக்கு எதிராகக் கொந்தளிக்கும் பெண் எம்.எல்.ஏ. முதல்வரிடம் செல்லும் பஞ்சாயத்து 

 எம்.எல்.ஏ. கீதா

Chennai: 

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்மீது புகார் கொடுக்க கீதா முடிவு செய்துள்ளார். 

 கடும் கோஷ்டி பூசலால் கரூர் மாவட்ட அ.தி.மு.க. கலகலத்து போயுள்ளது. கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நடவடிக்கை அ.தி.மு.க.வினருக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சர் கோஷ்டி என்றும், அவருக்கு எதிரானவர்கள் சேர்ந்து மற்றொரு கோஷ்டியும் உருவாகியுள்ளது. ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தினகரன் அணியிலிருந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினருக்குக் குடைச்சல் கொடுத்துவருகிறார். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலுள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான கீதா மணிவண்ணனுக்கும் இடையே நீறுப்பூத்த நெருப்பாக இருந்த மோதல் எரிமலையாக வெடித்துள்ளது. 
அமைச்சருக்கு எதிராகப் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார் கீதா மணிவண்ணன். இந்தத் தகவல் கிடைத்தும் கீதா மணிவண்ணனைத் தொடர்பு கொண்டோம். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 உங்களுக்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதே?

 கடந்த 4ம் தேதி கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் செய்தோம். விழாவும் சிறப்பாக முடிந்தது. அந்த விழாவில்தான் பிரச்னை பெரிதாக வெடித்தது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கை கீதா சிறப்பாக வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார் என்று பாராட்டிப் பேசினார். அது, அமைச்சர் தரப்புக்குப் பிடிக்கவில்லை. 
 விழாவில் எம்.எல்.ஏ.க்குரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கரே காரணம். மேடையில் எனக்குப் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தபோது, அது மறுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கேட்டால், சரியான பதிலளிக்கவில்லை. விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தபோதும், விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் நடந்தவிதம் எனக்குக் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதனால், கரூரில் நடந்துவரும் அரசு விழாவைப் புறக்கணித்துவிட்டு சென்னை வந்துள்ளேன். கரூரில் நடக்கும் அமைச்சர் தரப்பினரின் அடாவடிகள் குறித்து முதல்வரிடம் புகார் சொல்ல அனுமதி கேட்டுள்ளேன். நாளை அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

முதல்வரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து என்ன புகார் கொடுக்கபோகிறீர்கள்?

நிறைய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. யாரையும் மதிப்பதில்லை. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்மீது அதிருப்தியில் உள்ளனர். மருத்துவக்கல்லூரி விவகாரத்தில்கூட அரசியல் செய்கின்றனர் அமைச்சர் தரப்பு. மேலும், மாவட்ட நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதில்லை. கொங்கு மண்டல அமைச்சர்கள் டீமுடன் சேர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு செய்யும் சாதி அரசியலுக்கு அளவில்லை. இதுதவிர கட்சி உள்விவகாரங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் புகாராகக் கொடுக்கவுள்ளேன். 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வீர்கள்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவர், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கரூரில் அ.தி.மு.க.வை அழித்துவிடுவார்கள். தினகரன் அணியிலிருக்கும் செந்தில்பாலாஜி மூலம் கரூர் அ.தி.மு.க.வில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நடவடிக்கையால் அ.தி.மு.க. அழிவின் விளிம்பில் இருக்கிறது. 

 கீதாவின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கருத்துக் கேட்க அவரின் செல்போனுக்கு நீண்ட நேரம் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். 
 எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். விழா என்றால் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதை கீதா எம்.எல்.ஏ., வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறார். அமைச்சருக்கு வேண்டாதவர்களுடன் சேர்ந்து அவர் செயல்படுவதாக எங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வரிடம் புகார் கொடுக்கட்டும். ஆதாரங்கள் இருந்தால் முதல்வர் எங்களை அழைத்து விசாரிக்கும்போது கீதா மணிவண்ணன் குறித்த உண்மையை முதல்வரிடம் சொல்வோம் என்றனர். 

 கரூர் அ.தி.மு.க.வினர் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியும், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் (தனி) கீதா மணிவண்ணனும், குளித்தலை தொகுதியில் தி.மு.க.வும் வெற்றிபெற்றது. மூன்று தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. அதில், செந்தில் பாலாஜி மட்டும் தினகரன் அணியில் உள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கிறார். ஆனால், கீதா மணிவண்ணனுக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், இருவரும் இணைந்து கரூரில் நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். கீதா மணிவண்ணன், திருச்சியிலிருந்து கரூர் வரைக்கும் பிரமாண்ட வரவேற்பு பேனர்களை வைத்து அசத்தினார். அதோடு, விழாவில் கலந்து கொண்ட வி.வி.ஐ.பி.க்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து வியக்க வைத்தார். இது, அமைச்சர் தரப்புக்குப் பிடிக்கவில்லை. இதுவே, இருவருக்குமிடையே மோதலை ஏற்படுத்தியது" என்றனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close