Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மர உடையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த காணி இன மக்கள்!

காணி இன மக்கள்

காணி இன மக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பாரம்பர்ய மர உடையில் வந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணைப் பகுதியில் காணிக்காரர்கள் என்னும் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைப் பகுதியில் மரங்களை நடவு செய்து வனப்பகுதியை உருவாக்கும் பணிக்காகக் குடியமர்த்தப்பட்ட அவர்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மைலார், அகஸ்தியர் நகர், சேர்வலார், இஞ்சிக்குழி ஆகிய 4 இடங்களில் சுமார் 165 காணி இனக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இவர்களின் கல்வி முன்னேறேற்றத்துக்காகக் கடந்த 1958-ம் ஆண்டு முதல் அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தப் பகுதியில் கல்வி அறிவு பெற்று 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பகுதியில் உள்ள அரசு குறு அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர் பணியானது இவர்களுக்கு வழங்கப்படுவதே இல்லை.

இந்தப் பகுதியில் அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர் பணிக்கு பணம் பெற்றுக் கொண்டு வெளியிடங்களில் இருந்து ஆட்களை நியமிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த பணிநியமனத்திலும் இந்தப் பகுதியினருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், மாற்று சமூகத்தினருக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து காணி இன மக்கள் இன்று பாரம்பர்ய உடை அணிந்தபடியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மர உடையில்

இது குறித்து தமிழக ஆதிவாசிகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளரான ஆறுமுகம் கூறுகையில், ’’கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போல வெளியிடத்தைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் பகுதியில் பணியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத வகையில் அதிகாரிகள் திட்டமிட்டு எங்களைத் தவிர்க்கிறார்கள். நாங்கள்: பல வருடக்களாக மலைப் பகுதியில் வசிக்கும் நிலையில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள நிலங்கள், விளைநிலங்களுக்கு பட்டா வழங்க கமிட்டிகள் அமைக்கப்பட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

பாபநாசம் அணைப் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிப்பதால் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் 9-வது வார்டு பகுதியை பழக்குடி இனத்தவருக்கு ஒதுக்க வேண்டும். அல்லது மைலார், அகஸ்தியர் நகர், சேர்வலார், பாபநாசம் கீழணை ஆகிய பகுதிகளைக் கொண்ட தனி வார்டு உருவாக்கப்பட வேண்டும். காணியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சுத்தமான குடிநீர், மின் வசதி, இணைப்புச் சாலை, அங்கன்வாடி, சமுதாயநலக் கூடம், மைலார் பகுதிக்கு ஆற்றுப்பாலம் ஆகியவை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதை வலியுறுத்தியே பாரம்பர்ய உடையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்’’ எனத் தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close