Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு – அதிருப்தியில் ’குடி’மகன்கள்

புதுச்சேரியில், மதுபானங்களின் விலையை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளதால், உள்ளூர்-வெளியூர் ‘குடி’மகன்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளுக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுபானக் கடைகளில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனைசெய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே, புதுச்சேரியை நோக்கிப் படையெடுக்கிறார்கள் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மதுப் பிரியர்கள். கணிசமான அளவில் விதவிதமான மது பானங்களுக்கு உள்ளூர் மதுப் பிரியர்களும் இருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்திற்கு வருவாயை ஈட்டித்தரும் முக்கியத் துறையாக கலால்துறை இருக்கின்றது. இந்நிலையில், மதுபானங்களுக்கான கலால்வரியை புதுச்சேரி அரசு திடீரென உயர்த்தியிருப்பது மதுபானப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி

இதனால் விஸ்கி, ரம், பிராந்தி போன்ற மதுபானங்களுக்கான அடிப்படை விலையை ரூ.68–லிருந்து 75 ரூபாய்க்கும், ரூ.78–லிருந்து ரூ.90–க்கும், ரூ.85-லிருந்து ரூ.100-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பீர் விலையை ரூ.4.50-லிருந்து ரூ.6-க்கும், ஓயின் விலையை ரூ.15-லிருந்து ரூ.20-ம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கான கலால் வரியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுவிட்டதால், புதிய விலைப்பட்டியல் உடனடியாக மதுபானக் கடைகளில் அமலுக்குவந்துள்ளது. இதன்மூலம் 2 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. திடீரென உயர்ந்த மதுபானங்களின் விலை, மதுப் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில், ”கலால்துறையின் இந்த விலையுயர்வு உத்தரவால், மதுபானக் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து விற்பனை பாதிக்கப்படும். வருடத்திற்கு மூன்று முறை கலால் வரியை அரசு உயர்த்துவது கண்டிக்கத்தக்கது” என்று மதுபானக் கடைகளின் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர்.

புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை  வணிக வரித்துறை, கலால்துறை, போக்குவரத்துத்துறை போன்றவைகளின் வருவாய் மூலமே நிர்வாகத்தை நடத்திவருகிறது. இதில், கலால்துறை மூலம் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 671 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது உயர்த்தப்பட்ட வரியின்மூலம், கலால்துறைக்குக் கூடுதலாக ரூ.30 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ”கலால்துறைக்கு ஆண்டு வருமான இலக்கு 700 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால்தான் மது பானங்களின் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது” என்று கலால்துறை விளக்கமளித்துள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close