Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செவிலியர்கள் நாளை ஸ்ட்ரைக்!- ஊதிய உயர்வை அமல்படுத்த வேல்முருகன் கோரிக்கை

செவிலியர்கள்


''ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால், 11.10.2017-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் இறங்கப்போவதாக தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் அறிவித்துள்ளார்கள். அவசரச் சட்டம் இயற்றி ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தையே அனைத்து செவிலியர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்'' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உயிர் காக்கும் மருத்துவம் என்று சொல்வதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், அந்த மருத்துவத்துறையில் பணியாற்றும் தனியார் மருத்துவமனைச் செவிலியர்களுக்கு, உயிர் பிழைக்கவும் முடியாத நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. வெறும் 6,000, 7,000, 8,000 என்ற அளவில்தான் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்கள் என்றால், 10,000 வழங்கப்படுவதாகத் தெரிகிறது; அதுவும் அரிதாகத்தான். மேலும், அவர்களின் பணி நேரம் சட்டப்படியான அளவைவிடவும் அதிகமாக இருப்பதால், மனித உரிமைகளுக்கு எதிராக அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்.

இந்த ஊதியம், பணியிலுள்ள அந்த செவிலியருக்கு மட்டுமாவது போக்குவரத்துச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்கும் செலவு போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்காவது போதுமா என்றால், போதாது என்பதுதான் வெளிப்படை. மேலும், இந்தப் பணிக்கான பட்டயப் படிப்புக்காகப் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக்கூட இந்த ஊதியம் உதவவில்லை. இப்படி, நியாயமான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிந்தும் அதைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்துவருகிறது அரசு. கடந்த 2013-ம் ஆண்டில்,இப்போதிருக்கும் கூலியைவிடவும் குறைவாகவே இருந்தது. அதனால், தமிழகமெங்கும் தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதன் காரணமாகவே, இப்போதிருக்கும் இந்த ஊதியம் கிடைக்கிறது. 

வேல்முருகன்


இந்த ஊதியத்தை ஏற்றுக்கொள்ளாமல், வேறு வழியும் இல்லாமல் இருந்துவரும் நிலையில்தான் உச்ச நீதிமன்றம் செவிலியர்களின் வாழ்நிலையை ஆய்வுசெய்து, அவர்களுக்கென்று ஊதியக் குழுவை அமைக்குமாறு நடுவண் அரசுக்கு உத்தரவிட்டது. அந்தக் குழு தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தைப் பரிந்துரைசெய்தது. இந்தப் பரிந்துரைகளை , அவசர அவசியமாக அமல்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றுமாறு 29.09.2017 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசு கடிதம் அனுப்பியது. ஆனால், கேரளம் தவிர வேறு எந்த மாநிலமும் இதை கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. கேரள அரசு ரூ.20,000 குறைந்தபட்ச ஊதியமாக அறிவித்திருப்பதுடன், அதிவிரைவில் ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, 50 படுக்கைகளுக்குக் குறைவாக உள்ள மருத்துவமனைகளில், ஊதியம் ரூ.20,000 வழங்க வேண்டும். 50 முதல் 100 படுக்கைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் அரசு செவிலியர் பெறும் ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் குறைவு. 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் 10 சதவிகிதம் குறைவு. 200 படுக்கைகளுக்கு மேலுள்ள மருத்துவமனைகளில் அரசு செவிலியர் ஊதியத்துக்கு ஈடான ஊதியம். ஊதியக் குழுவின் இந்தப் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால், வரும் 11.10.2017-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் இறங்கப்போவதாக தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் அறிவித்துள்ளார்கள்.

 தமிழகமெங்கும் இப்போது டெங்கு காய்ச்சல் பரவியுள்ள நிலையில், நோயாளிகளைக் கவனிக்க செவிலியரின்றி நிலைமை படுமோசமாகக்கூடும். எனவே, தமிழக அரசு இதைக் கருத்தில்கொண்டு, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதவாறு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதில், கேரள அரசு போல தமிழக அரசு செயல்பட வேண்டும். அவசரச் சட்டம் இயற்றி, ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். இன்னும் சொல்வதென்றால், பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விதத்தில், அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தையே அனைத்து செவிலியர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close