Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊதிய உயர்வு முதல் டெங்கு பிரச்னை வரை- அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை!

தலைமை செயலகம்

“டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழல், அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு முடிவு காண  தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.  டெங்கு காய்ச்சலால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை  அமல்படுத்துவது குறித்து எல்லாம் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 'பழைய பென்ஷன்  திட்டத்தையும் 7-வது ஊதிய உயர்வையும் அமல்படுத்த வேண்டும்' என்று கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்தியது போல மாநில அரசு ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்தது. தமிழக நிதித்துறைச் செயலாளர் சண்முகம் தலைமையில் இந்தக் குழு  அமைக்கப்பட்டது. இதில், ஆய்வறிக்கையை கடந்த 27-ம்  தேதி   அரசிடம் தாக்கல்செய்தனர். இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை இடைக்கால நிவாரணமாக அரசு ஊழியர்களுக்கு 20 சதவிகித சம்பள உயர்வை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசுத் தரப்பிலும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தாலும், 1-1-17 முதல் முன்தேதியிட்டே 20 சதவிகித ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளும் முடிவில் அரசு இருந்தது. ஆனால், அரசு ஊழியர்கள் கடந்த ஆண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அக்டோபர் 13-ம் தேதிக்குள் அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும்'  என நீதிமன்றம்  உத்தரவிட்டது. 

முதல்வர்

இந்நிலையில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க அமைக்கப்பட்ட 'நிபுணர் குழு'  அறிக்கையை  அமல்படுத்துவதற்காக, இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துறையை அமல்படுத்துவதால், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமைகுறித்தும் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், அதிகாரிகள் தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. ஊழியர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில், அரசு ஊழியர்கள் ஊதிய விவகாரத்தில் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதால், அரசு ஊழியர் சங்கத்தினர் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். 

அதேபோல, தமிழகத்தில் டெங்கு பாதிப்பினால் மரணங்கள் அதிகரித்துவருகின்றன.இதனால், பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மாவட்டம் தோறும் அமைச்சர்கள் முகாமிட்டு, டெங்கு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று, அமைச்சர்களிடம் முதல்வர் வலியுறுத்துவார் என்கிறார்கள். மேலும், டெங்கு காய்ச்சலினால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதுகுறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, வடகிழக்குப் பருவமழையினால் நோய்த் தொற்றுகளைத் தவிர்ப்பதற்குச் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சர்களின் கருத்துகளை  முதல்வர் கேட்க உள்ளார். இதனால், இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close