Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"சேலம் கூட்டத்தை தேனியில் மிஞ்ச வேண்டும்!" எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஓ.பி.எஸ் உத்தரவு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள்

றைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசின் சார்பில் பல்வேறு இடங்களிலும் பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நவம்பர் 5-ம் தேதி, தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளை மாவட்ட நிர்வாகம் ஒரு மாதத்துக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து தொண்டர்களைத் திரட்டுவது, நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது உள்ளிட்ட வேலைகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இப்போதே இறங்கியுள்ளனர். அதன்படி சமீபத்தில் தன் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் பலரிடமும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார். அதற்குக் காரணம், இந்த விழாவை இதுவரை தமிழகத்தில் நடந்திராத, பிரமாண்டமான விழாவாக நடத்த வேண்டும் என்ற பன்னீரின் எண்ணம்தான்.

நெரிஞ்சி முள் மைதானம்:

மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் துறையைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளை விழாவுக்கு அழைத்துவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். விழா நடைபெறும் இடமும் அதற்கேற்ப பிரமாண்டமாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, ஊருக்கு வரும்போதெல்லாம் விழா நடத்துவதற்கு பல இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்த ஓ.பி.எஸ்., கடைசியாக போடி விலக்கு அருகேயுள்ள போஜராஜ் மில்லுக்குச் சொந்தமான மைதானத்தைத் தேர்வுசெய்தார் ஓ.பி.எஸ். இரண்டு நாள்களுக்கு முன்பு அதிகாரிகள் புடைசூழ, அந்த இடத்தை நேரில் ஆய்வுசெய்ய வந்தார் ஓ.பி.எஸ். அப்போது மைதானம் முழுவதும் சூழ்ந்து கிடக்கும் புதர்களில் இருந்து நெரிஞ்சிமுள்ளை சேகரிக்கும் பணியில் அப்பகுதி பெண்கள் ஈடுபட்டிருந்தனர். (ஒரு கிலோ நெரிஞ்சிமுள் 40 ரூபாய்). அப்போது, "புதர் அதிகமாக இருக்கிறது. மைதானத்தை விரைந்து சீர்செய்ய வேண்டும்" என்றார். இதைக்கேட்ட அதிகாரிகள் துணை முதல்வரிடம் 'சரி' என்ற ரீதியில் தலையாட்டினர்.

வாயு மூலையா? கன்னி மூலையா?

மைதானத்துக்குள் இறங்கிய ஓ.பி.எஸ் சிறிது தூரம் நடந்துசென்று சுற்றிலும் பார்வையிட்டார். அப்போது அவருடன் வந்த அதிகாரிகள், மைதான வரைபடத்தைக் காண்பித்து விளக்கம் கொடுத்தனர். "மேடையை இங்கே அமைக்கலாம்; பார்க்கிங் இங்கே அமைக்கலாம். மக்களை வரிசையாக உள்ளே வரவழைக்க, இங்கே பாதை அமைக்கலாம்" என விழா ஏற்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஓ.பி.எஸ், ‘விழா மேடை வாயு மூலையா? கன்னி மூலையா?’ என்று கேள்வி கேட்டார். அதனைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள், பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியடைந்தனர். அதனை உணர்ந்தவராக, ‘வரைபடத்தை ஸ்கேன் செய்து எனக்கு அனுப்புங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்றார். வேகமாக தலையாட்டினர் அதிகாரிகள்.

ஓ.பன்னீர் செல்வம்

கிணறு இருக்கிறதா எங்கே?

மைதானத்தின் ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன பணிகளைச் செய்யப்போகிறோம் என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த அதிகாரிகள், "அங்கே ஒரு பழைய கிணறு இருக்கிறது. அதைக் கம்பிவேலி கொண்டு மூட வேண்டும்" என்றனர். அதைக்கேட்ட ஓ.பி.எஸ், "கிணறா? எங்கே இருக்கிறது காட்டுங்கள்" என்று சொல்லி விறுவிறுவென மைதானத்துக்குள் நடக்க ஆரம்பித்தார். நெரிஞ்சிமுள் கால்களைப் பதம்பார்க்க, ஓ.பி.எஸ் உள்பட அதிகாரிகளும், போலீஸாரும், பத்திரிகையாளர்களும் புதருக்குள் நடக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அதற்குமேல் செல்லமுடியாத சூழலில், "அந்தக் கிணற்றை பாதுகாப்பாக கம்பிவேலி அமைத்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் ஓ.பி.எஸ். 'கிணறு' என்று சொன்னவுடன், அவர் ஏன் முள் என்றும் பாராமல் வேகம் எடுத்தார் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

முகூர்த்தக்கால் நடப்பட்ட மைதானம் 

மதுரையில் தினகரன் நடத்திய பிரமாண்ட கூட்டத்தைத் தொடர்ந்து தேனியிலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக முதன்முதலில் தங்க தமிழ்ச்செல்வனால் அடையாளம் காணப்பட்ட மைதானம்தான், இந்த போடி விலக்கு மைதானம். பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு, மைதானத்தில் முகூர்த்தக்கால் நட்டார் தங்க தமிழ்ச்செல்வன். அதன் பிறகுதான் ஓ.பி.எஸ், எடப்பாடி அணியுடன் இணைந்து துணை முதல்வரானார். பொதுக்கூட்ட ஏற்பாடு கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, இப்போது ஓ.பி.எஸ் வரும் 19-ம் தேதி அதே மைதானத்தில் முகூர்த்தக்கால் நட இருக்கிறார் . தம்முடைய பலத்தைக் காட்ட சேலத்தில் முதல்வர் எடப்பாடி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தினார். அதேபோல துணை முதல்வர் ஓ.பி.எஸ், தனது சொந்த மாவட்டத்தில் தமது பலத்தைக் காட்ட வேண்டும் என்று தமது ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறார். ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும்,  இப்போதில் இருந்தே நூற்றாண்டு விழாவுக்கு ஆள் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close