Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சப்-இன்ஸ்பெக்டர்' பிரித்திகா யாஷினியின் ஒருநாள் பணி எப்படியிருக்கிறது? #LiveReport #VikatanExclusive

 பிரித்திகா யாஷினி

இந்தியாவிலேயே முதல்முறையாக, திருநங்கை பிரித்திகா யாஷினி, சப் -இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்து கலக்கிவருகிறார். சென்னை வண்டலூரில் பயிற்சி முடித்த அவருக்கு, சமீபத்தில் சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவரது ஒரு நாள் பணி எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, சூளைமேடு காவல் நிலையத்துக்குச் சென்றோம். அங்கு பிரித்திகா யாஷினியின் பணிகளைப் பார்த்து அசந்துபோனோம்.

 நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு பிரித்திகா யாஷினி, சப் -இன்ஸ்பெக்டரானார். 'ஆண்' என்ற கல்விச் சான்றிதழைப் 'பெண்' என்று மாற்ற, பிரித்திகா யாஷினி நீதிமன்றப் படியேறி வெற்றிகண்டார். அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றிப்பெற்று தற்போது பயிற்சியை முடித்து பணியில் சேர்ந்துள்ளார்.

சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிரித்திகா யாஷினிக்கு சக சப்-இன்ஸ்பெக்டருக்குக் கொடுக்கப்படும் அனைத்துப்  பணிகளும் கொடுக்கப்படுகிறது. அவற்றை நேர்த்தியாகவும் திறமையாகவும் அவர் செய்வதாக சூளைமேடு போலீஸார் தெரிவித்தனர். 
 
 யார் இந்த பிரித்திகா யாஷினி?

சேலம் மாவட்டம், கந்தப்பட்டியைச் சேர்ந்த கலையரசன்- சுமதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தன்னிடம் பெண் தன்மை இருப்பதை உணர்ந்த அவர், தன்னை மாற்றிக்கொண்டார். இது, குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குகூட அவரை அழைத்துச் சென்றனர். அதன்பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர், திருநங்கைகளுடன் சேர்ந்துகொண்டார். அங்கிருந்தபடியே தன்னுடைய லட்சியமான ஐ.பி.எஸ். அதிகாரியாகப் போராடத் தொடங்கினார்.

 அவரது லட்சியத்தின் ஒரு படியேறிவிட்டார். அதாவது, காக்கி சீருடையை அணிந்து கம்பீரமாக காவல் பணிக்கு  பிள்ளையார் சுழி போட்டியிருக்கிறார் பிரித்திகா யாஷினி. அவரது வெற்றிக்காக உழைத்தவர்கள் ஏராளம். சப்-இன்ஸ்பெக்டரான பிறகும் அவரது பயணம் முடிவடையவில்லை. அவரது லட்சியமான ஐ.பி.எஸ் தேர்வுக்காகத் தயாராகிகொண்டிருக்கிறார். 

 பிரித்திகா யாஷினி

சூளைமேடு காவல் நிலையம் 

 சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில், கடந்த 9-ம் தேதி சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். உயரதிகாரிகள், உறவினர்கள் வாழ்த்துகளோடு சென்ற பிரித்திகா யாஷினிக்கு காவல் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மீடியாக்களும் அவர்குறித்த தகவல்களை வெளியிட்டு, திருநங்கை இனத்துக்கு பெருமை தேடிக் கொடுத்தன. காவல் துறையில் டி.ஜி.பி., கமிஷனர் என உயரதிகாரிகளின் பதவி ஏற்பு விழாவை மட்டுமே செய்திகளாக வெளியிடும் மீடியாக்கள், பிரித்திகா யாஷினியின் பதவி ஏற்பு செய்தியையும் வெளியிட்டது.

 இது, காவல்துறை வரலாற்றில் மைல்கல். அன்றைய தினம் வழக்கத்தைவிட பரபரப்பாகக் காணப்பட்டது சூளைமேடு காவல்நிலையம். சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினியை முகமலர்ச்சியோடு வரவேற்றனர் சூளைமேடு போலீஸார். அடுத்து, அவருக்கான இருக்கையில் அமர்ந்து பணிகுறித்த விவரங்களை சக போலீஸாரிடம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். வழக்குகள் பதிவுசெய்வது, விசாரிப்பது எப்படி? காவல் நிலையத்தின் அன்றாடப் பணிகள் ஆகியவற்றை சக போலீஸாரிடம் கேட்டறிந்துகொண்டார் பிரித்திகா யாஷினி. 

 நைட் டூயூட்டி 

வழக்கம்போல சூளைமேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சக சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒதுக்கப்படுவதைப்போல பிரித்திகா யாஷினிக்கும் பணி ஒதுக்கப்பட்டது. அவருக்கு, நேற்று இரவு பணி. ரோந்து வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்த பிரித்திகா யாஷினி, சூளைமேடு காவல் எல்லையை வலம்வந்தார். நள்ளிரவில் சுற்றித் திரிந்தவர்களிடம் விசாரித்தார்.

 இடைவெளியில் சக போலீஸாருடன் டீ குடித்தார். நைட் டூயூட்டியில் குறிப்பிடும் வகையில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை. இதனால், பிரித்திகா யாஷினிக்கு எந்த வழக்கும் சிக்கவில்லை. பணி விவரத்தை உயரதிகாரிகளிடமும் அடுத்து வந்தவர்களிடமும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்கில் பிரித்திகா யாஷினி கலந்துகொண்டார். 

 இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினியிடம் பேச முயன்றோம். காவல்துறையில் மீடியாக்களிடம் பேச உயரதிகாரிகளைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்ற விதிமுறையை சுட்டிக்காட்டியபடி அவர் சென்றுவிட்டார்.

இதனால், சூளைமேடு போலீஸாரிடம் பிரித்திகா யாஷினி குறித்து கேட்டதற்கு, "எங்களில் ஒருவராகத்தான் பிரித்திகா யாஷினியைப் பார்க்கிறோம். எந்தப் பணி என்றாலும் ஆர்வமாக இருக்கிறார். காவல் நிலையத்தில் அன்றாடம் நடக்கும் பணிகளை உன்னிப்பாகக் கவனிக்கிறார். சந்தேகங்களை எங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அடுத்து, 'நைட் டூயூட்டி' கொடுத்ததும் தயக்கமில்லாமல் சிரித்த முகத்துடன் சென்றார். சக போலீஸாருடன் சகஜமாகப் பேசுகிறார். சிரித்த முகத்துடனே இருக்கிறார். அவர் திருநங்கை என்ற எண்ணமே எங்களுக்குள் இல்லை" என்றனர். 

 இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, "சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினி, சிறப்பாகப் பணியாற்றுகிறார். அவர், இதுவரை எந்த வழக்கையும் விசாரிக்கவில்லை. காவல் நிலைய அன்றாடப் பணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பீட் செக்கிங், நைட் டூயூட்டி கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். 

 வாழ்த்துகள் பிரித்திகா யாஷினி... பணிகள் தொடரட்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close