Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியை விடுவிக்க நீதிபதிகள் கூறிய 3 காரணங்கள்!

சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில், அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரை விடுதலைசெய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2013ல் இருந்து, தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். 

ஆருஷி
 

பல் மருத்துவர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார்,  உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள்.  கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி, தல்வார் தம்பதியரின் 14 வயது மகள் ஆருஷியும், 45 வயதான வேலைக்காரர் ஹேம்ராஜும் படுகொலை செய்யப்பட்டனர். ஆருஷி அவரது படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். ஹேம்ராஜ் மொட்டை மாடியிலுள்ள தண்ணீர் டேங் அருகே கழுத்து அறுபட்டு கொலையுண்டு கிடந்தார். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலைச் சம்பவம்குறித்து முதலில் விசாரித்த நொய்டா போலீஸ், ராஜேஷ் தல்வார் மீது குற்றம் சாட்டியது. உத்தரப்பிரதேச போலீஸ் இந்தப் படுகொலைகளை கெளரவக் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகித்தது. பின்னர், வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. 

ஆருஷி
 

‘ஆருஷியும் ஹேம்ராஜூம் படுக்கை அறையில் அலங்கோலமான நிலையில் இருந்ததை ஆருஷியின் பெற்றோர் பார்த்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இருவரையும் கொலைசெய்ததாகவும்’  தெரியவந்ததாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2009-ம்  ஆண்டு வரை  இந்த வழக்கின் விசாரணையில் துப்பு துலங்காமல் தொய்வு ஏற்பட்டது. தல்வார் குடும்பத்தின் வேலைக்காரர்கள் மூன்று பேர் மீது வழக்கு திசைதிரும்பியது. பின்னர், கிஷோர் என்பவர் தலைமையிலான சி.பி.ஐ குழு, 2009-ம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது. வேலைக்காரர்கள் மூவருக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தது. ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொன்றது, ஆருஷியின் பெற்றோர்தான் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக சி.பி.ஐ தெரிவித்தது.  

இதைத் தொடர்ந்து, ஆருஷி கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களான  ராஜேஷ் தல்வார் – நூபுர் தம்பதி 2013-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். காசியாபாத் சி.பி.ஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. தாஸ்னா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  

நேற்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தல்வார் தம்பதியை விடுதலைசெய்வதாகத் தீர்ப்பளித்தனர். 
நாட்டை உலுக்கிய இவ்வழக்கில், தல்வார் தம்பதியை விடுவிக்க அலகாபாத் நீதிமன்றம் மூன்று காரணங்களைக் கூறியுள்ளது.

1. ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் எந்த நேரடியான ஆதாரமும் சி.பி.ஐ தரப்பில் வழங்கப்படவில்லை.
2. ராஜேஷ் – நூபுர் தல்வார் தம்பதி கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை.
3. தல்வார் தம்பதி, இந்தக் கொலை செய்வதற்கான நோக்கம் என்ன என்பதையும் சி.பி.ஐ தரப்பில் கண்டறியத் தவறிவிட்டது.

இந்த மூன்று காரணங்களால், தல்வார் தம்பதிக்கும் இந்த இரண்டு கொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆருஷியையும் ஹேம்ராஜூவையும் யார் கொன்றது என்ற மர்மம் தொடரும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close