Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`கொசுவை ஒழிக்க சீனாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்!' - அரசை சீறும் டாக்டர்கள் சங்கம் 

கொசுவை ஒழிக்க சீனா, பிரேசில், அமெரிக்கா நாடுகளிடமிருந்து மத்திய, மாநில அரசு படிப்பினைகளைப் பெற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டெங்கு காய்ச்சல் தமிழத்தில் வேகமாகப் பரவிவருகிறது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதித்துள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மத்திய - மாநில அரசுகளின் அக்கறையின்மையே இதற்குக் காரணம். மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. டெங்குவைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்குவதற்கும் முடியாமல் அரசு திணறிவருகிறது. இந்நெருக்கடி திடீரென்று ஏற்பட்டதல்ல. நீண்டகாலமாக மத்திய - மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத்துறையைப் புறக்கணித்ததின் விளைவுதான் இது. தமிழகத்தில் மக்கள் தொகைக் கேற்ப அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் ஊழியர்களும் இல்லை. மருத்துவமனை படுக்கைகளும் இல்லை. டெங்கால் இறப்பு அதிகரிப்பதற்கு, இவையும் மிக முக்கியக் காரணமாகும். அரசுகளின் நீண்டகாலத் தவறுகளால் மிகப்பெரும் பாதிப்புகளை இன்று சந்தித்துவருகிறோம். அதீதமான அலட்சியப் போக்கு அரசிடம் உள்ளது. ஒதுக்கப்படும் குறைவான நிதியைக்கூட முறையாகப் பயன்படுத்துவதில்லை. 

சீனாவில், மலட்டுத் தன்மைவாய்ந்த ஆண் கொசுக்கள் மூலம் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு உல்பேச்சியா (WolBachia) என்ற பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் டெங்குவைரஸ் பரவலையும் தடுக்கிறது. பிரேசில் நாட்டில் உல்பேச்சியா பாக்டீரியாக்கள் டெங்கு வைரஸ், ஸிக்கா வைரஸ் போன்ற வைரஸ் பரவல்களைத் தடுத்திடவும் மலேரியா கிருமிகளின் பரவலைத் தடுத்திடவும் பயன்படுத்துப்படுகிறது. நமது அரசு இத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவில்லை என்பதோடு, இதுகுறித்த ஆராய்ச்சிகளைக்கூட செய்யவில்லை. எனவே, டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும். அமெரிக்காவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத மருந்துகள் கொசு ஒழிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. கியூபாவில் டெங்கு தடுப்பை ஒரு மக்கள் இயக்கமாகவே ஃபிடல் காஸ்ட்ரோ மாற்றினார். வியட்நாமில் மாணவர்களுக்குக் கொசுவால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்பு உணர்வு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நாடுகளிடமிருந்து நாம் படிப்பினைகளைப் பெற வேண்டும்.

டெங்கு தடுப்புப் பணியை வெறும், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. இக்குடிநீர் உண்மையிலையே, தற்பொழுது டெங்குப் பரவலைத் தடுக்கிறதா என்பதை ஆராய வேண்டும். ஏனெனில் ஒரு மருந்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை பாக்டிரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் பெற்றுவிடுவது இயல்பான ஒன்றாகும். எனவே, ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவது சரியல்ல. நிலவேம்புக் குடிநீரை சர்வரோக நிவாரணியாக மாற்றி, அதை வழங்குவதையே பெரிய கடமையாகப் பூதாகரமாக மாற்றி பிரச்னையைத் திசைதிருப்பக் கூடாது. உ ரிய ஆய்வுகளை அதுகுறித்து மேற்கொள்ள வேண்டும்.

2015 முதல் பிரேசில், மெக்சிக்கோ, வெனிசூலா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 18 நாடுகளில் டெங்குக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் தேசிய தடுப்பூசித் திட்டத்திலேயே டெங்குக்கான தடுப்பூசி சேர்க்கப்பட்டுள்ளது. டெங்வேக்சியா(Deng Vaxia) என்ற இத்தடுப்பூசி இந்தியாவிலும் லூதியானா, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியை டெங்கு அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் பயன்படுத்திட உலக நல நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இத்தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தடுப்பூசி ஆராய்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close