Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைகேடு: முன்னாள் தலைவர் உள்ளிட்ட 10 பேர்மீது வழக்கு!

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நெல்லை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவரான ஹரிஷ் மேத்தா உள்ளிட்ட 10 பேர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முறைகேடுஇந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நாடு முழுவதும் 700 கிளைகள் உள்ளன. பேரிடர் உள்ளிட்ட அத்தியாவசிய சமயங்களில் தன்னார்வத்துடன் செயல்படக் கூடிய இந்த அமைப்பின்மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. நெல்லையில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் அநாதைப் பிணங்களை எரித்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்காமலே அதற்கான தொகையை எடுத்துச் செலவு செய்தது, வெள்ள நிவாரண நிதியை வசூல் செய்து அதை உரிய அமைப்புக்கு அனுப்பி வைக்காதது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகின.

இது தொடர்பாக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பல்வேறு தகவல்களைத் திரட்டினார். அதன் அடிப்படையில் அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் சேர்மன் ஹரிஷ் மேத்தா, துணைத் தலைவராக இருந்த பிரபாகர், நெல்லை மாவட்ட பொருளாளராக இருந்த சொக்கலிங்கம், நெல்லை மாநகராட்சி அதிகாரியான சாமுவேல் செல்வராஜ் உள்ளிட்டோர்மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கடந்த 4 வருடமாக இதற்காகச் சட்டப் போராட்டங்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் பிரம்மாவிடம் கேட்டதற்கு, ``இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நெல்லை மாவட்ட அமைப்பானது மாவட்ட ஆட்சித் தலைவரின்கீழ் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்கான இந்த அமைப்பில் முறைகேடுகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதுதொடர்பாக நான் தகவல் அறியும் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். ஒவ்வொரு முறையும் மாநில ஆணையத்தில் முறையிட்டே தகவல்களைப் பெற்றேன். அதில் கிடைத்த தகவல்களின் மூலம் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தேன். 

2013-ல் தொடங்கிய இந்தப் பணியில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன. அநாதைப் பிணங்கள் குறித்த எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டதாகத் தெரிவித்ததிலும் குளறுபடிகள் இருந்தன. அதனால் வழக்கு தொடர காவல்துறையிடம் முறையிட்டேன். ஆனாலும் நடவடிக்கை இல்லை. அதனால், நீதிமன்றத்தை நாடினேன். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் வழக்கு தொடர உத்தரவிட்டது. அதையும் தாமதம் செய்தவர்கள், இப்போது வேறு வழியில்லாமல் 10 பேர்மீது 406, 477a, 409, 120b, 420 என ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இனியும் வழக்கை கிடப்பில் போட்டுவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என்றார் ஆதங்கத்துடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close