Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சி நீடிக்க விரும்பும் கருணாநிதி: தா.பாண்டியன் தாக்கு!

கோவை : தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சி நீடிக்கவேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார் அதனால்தான் ஆறாவது முறையாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் அவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தா.பாண்டியன்  செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.மேலும் அவர் கூறுகையில்,

"தேர்தல் நடைமுறை விதிகளை பயன்படுத்தி காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் வரலாற்றின் உழைக்கும் வர்க்கத்துக்கான மே தினத்தின் போது கொடிகள் கட்டக் கூடாது உட்பட பல்வேறு தடைகளை தேர்தல் ஆணையம் விதிப்பது சரியல்ல.

தொழிலாளர்கள் நடத்துகிற புரட்சிகர மே தினத்தை தடை செய்கிற தேர்தல் ஆணையம்,இந்தியா முழுவதும் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் எதையும் தடை செய்ததது இல்லை.இது உழைக்கும் வர்க்கத்தை அவமதிக்கும் செயல். தேர்தல் ஆணையம் இது போன்ற முடிவை மறுபரிசீலனை செய்துவரும்காலத்திலாவது திருத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை ரூ. 60 கோடி வரை பிடித்ததாக தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது. ஆனால், இதன் பின்னணியில் இருககக்கூடிய அரசியல் கட்சி தொடர்பு, அதன் பின்னணி குறித்து பிடித்து இத்தனை நாட்கள் ஆகியும் விவரங்களை வெளியிடவில்லை.எனவே, எது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பணம், பின்னால் எந்த சக்தி இருக்கிறது என்பதை வெளியிட வேண்டும். நேர்மையாக நடக்கிறது என்று தேர்தல் ஆணையம் சொன்னால் மட்டும் போதாது நம்பத்தகுந்த வகையில் இருக்க வேண்டும். எஞ்சி இருக்கும்12 நாட்களில் ஆவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, தேர்தல் கால விதிமுறைகளின் பேரில் இருக்கக்கூடிய கட்டுப்பாடு விதிகளை பயன்படுத்திக் கொண்டு,தொழில் நிறுவன அதிபர்கள் வேலையாட்களை தடாலடியாக பணி நீக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனம் 35தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் 17தொழிலாளர்களுக்கு உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது எனநோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 2மாதத்தில் அநியாயங்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உதவக்கூடாது.

பாதுகாப்பு துறையில் நேரடி முதலீட்டை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்துள்ளன. 2011 -ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை இந்தியாவில் நேரடி முதலீட்டில் மூன்றில் 2 பங்கு மொரீசியஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்து வந்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து முதலீடு வர வேண்டும். ஆனால், ஒரு கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட நாடு 100 கோடி கொண்ட நாட்டில் 2 பங்கு முதலீட்டை வைத்துள்ளது என்றால் இது குறித்து விசாரிக்க வேண்டும். மொரிசியஸ் தீவில் சின்ன பெயர் பலகையை வைத்து எளிதாக பதிவு செய்துவிட முடியும். பின்னர் கள்ளப்பணத்தை,வெள்ளைப்பணமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து மாற்றப்படுகிறது.

குஜராத்தில் 2003-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மோடி,கிருஷ்ணா கோதாவரியில் எரிவாயுஎடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு, 30 லட்சம் மெட்ரிக் டன் இருப்பதாகவும், அதை தன்னுடைய நிபுணர்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், அதை எடுத்தால் 2005-ம் ஆண்டு முதலே நாட்டுக்கு கச்சா எண்ணெய்,எரிவாயு இறக்குமதி செய்யத்தேவையல்லை எனச் சொன்னார்.

தற்போது, இந்திய கணக்கு தணிக்கை அதிகாரி, அது குறித்து அறிக்கையை சமர்பித்து உள்ளார்.கார்பொரேஷன் என்று அமைக்கப்பட்டு 16 வங்கிகளில் அந்த திட்டத்துக்காக ரூ. 19 ஆயிரத்து 700கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.இவ்வளவு பணமும் ஆய்வுக்காக,கட்டிடம் கட்ட, சுத்திகரிக்க என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சொட்டு எண்ணெயோ, எரிவாயுவோ எடுக்கப்படவில்லை. அநியாயமான முழு தோல்வி என கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு காரணமான அத்தனை பேரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. அந்த கட்சிதான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று கிளம்பி வந்துள்ளனர்.

37 எம்.பிகளை வைத்துள்ள அதிமுக தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவது இல்லை. இதுவரையிலும் மருத்துவப் படிப்புக்கு ஒரே தேர்வு நடத்தப்படும். மே 1-ம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள்.

பல மாநிலங்களில் பல வருடங்களாக மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு நடத்தப்படுவது இல்லை. மாநிலம் வாரியாக கல்வி தரம் வேறுபடுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தான் விரும்பும் செயலை செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில்நலிந்தவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் ஒதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இளைஞர்களால் தமிழகம் விடிய வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். அதனால்தான் 6-வது முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறாரா. அவருக்காக அல்ல, தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு கேட்கிறார்.எனவே, குடும்ப ஆட்சி வரக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வாக்கு அளிக்கக் கூடாது.

தேர்தலில் வைகோ போட்டியிடாதது குறித்து கேட்ட போது, திமுக சாதி கலவரத்தை தூண்டும் கட்சி என்று சொல்ல முடியாது. அது உண்மையோ, இல்லையோ இருப்பினும் 50 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருந்த அவர் தேர்தலில் தான் போட்டியிட வில்லை என அவர் தெரிவித்துவிட்டார். அது அவரது தனிப்பட்ட முடிவு. அதனால்,அவரிடம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் நான் கேட்கவிரும்பவில்லை. கேட்கவும் இல்லை.

தமிழகத்தில் தற்போது 46 சதவீதம் பேர் மதுக்குடிக்கிறார்கள் என்ற தகவலை அறியும் போது அவர்கள் யாருக்கு வாக்கு அளிக்கப் போகிறார்கள் என்ற பயம் எனக்கும் வந்துவிட்டது. விஜயகாந்த் சில இடங்களில் கோபமுடன் நடந்து கொள்வது குறித்து கேட்ட போது,பலருக்கும் பல விதமான பழக்க வழக்கம் உள்ளது. அதை தேர்தல் வந்தவுடன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஒரே மாதிரி பேச வேண்டும் என்று உத்தரவு போட முடியாது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தளி தொகுதி ராமச்சந்திரனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட போது, அவர் மீது வழக்குதான் போட்டிருக்கிறார்கள்.அது நிரூபிக்கப்படவில்லை.அதுமட்டும் இல்லாது, மாவட்டக்குழு பரிந்துரயை மாநிலகுழு ஏற்பதைத்தவிர வழியில்லை." என்று தெரிவித்தார்.

ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ