Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசின் குளறுபடிகளுக்கு மாணவர்கள்தான் பலிகடாவா? - மருத்துவ நுழைவுத் தேர்வு வில்லங்கம்

நேற்று (மே 1-ம் தேதி) நடந்துமுடிந்த சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வில், அதிகாரிகள் அதிக அளவில் கெடுபிடிகளை செய்துள்ளனர். அத்தோடு, தேர்வு மையங்களை சரியாக ஒதுக்காததால், மாணவர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் அதிக அளவில் நேரத்தை செலவழிக்க நேரிட்டது. இந்த காரணங்களால், ஏராளமான மாணவர்கள் பதற்றமடைந்து சரியாக தேர்வினை எழுதமுடியாமல் போனதாக குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தனர்.

இந்த கல்வியாண்டு கட்டாயம் மருத்துவ நுழைவுத் தேர்வினை நடத்தவேண்டும் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவால், குறுகிய நாட்களுக்குள் நுழைவுத் தேர்வுக்கு எங்களால் எப்படி தயாராவது எனவும் ஏராளமான மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பிரச்னைகள் குறித்து பேசினார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு.

''தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருக்கும் தேசிய அளவிலான மருத்துவ இடங்களுக்கான நுழைவுத் தேர்வினை நடத்த, சி.பி.எஸ்.இ ஏற்கனவே அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதன்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று (மே 1-ம் தேதி) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. அதில்  ஏராளமான கெடுபிடிகளுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டதால், சரியாக தேர்வினை எழுத முடியாமல் போனதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

பொதுவாக ஆல் இந்தியா ஃப்ரீ மெடிக்கல் டெஸ்டை எழுத நினைக்கும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பில் சேரும்போதே, இந்த தேர்விற்கான பயிற்சிகளையும் சேர்த்து ஆரம்பித்துவிடுவார்கள். இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர்களுக்கே, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், மதிப்பெண் குறைந்து, மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வே நடைபெறாது; நம் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அல்லவா. சி.பி.எஸ்.இ மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜூலை மாதம் பொது நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட இரண்டு மாதங்களில் அந்த மாணவர்களால் எப்படி நுழைவுத் தேர்வுக்கு தயாராக முடியும்?

அதோடு தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வித்திட்டங்களே சரியில்லை; இது நம் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் இல்லை; மனப்பாடத்திறனை மட்டுமே வளர்க்கக் கூடியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப் படி நுழைவுத்தேர்வை நடத்துவது சரியான விஷயம்தான். ஆனால், நடைமுறையில் இருக்கும் கல்வித்திட்டங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டிருக்கும் நம் கல்வித்திட்டங்களையும் முழுமையாக மாற்றி அமைத்த பிறகுதானே, பொது நுழைவுத்தேர்வினை நடத்த வேண்டும். அதுதானே சரியான கல்வித்திட்டமாக இருக்கும். இதனை செய்யாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகள்தான் குற்றவாளிகள். ஆனால், தண்டனை கிடைப்பதோ, அப்பாவி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும்தான். எனவே, இனியாவது தற்போதைய கல்வித்திட்டத்தினை மாற்றி, அடுத்த ஆண்டாவது தகுந்த பொது நுழைவுத் தேர்வினை நடத்த வேண்டும்'' என ஆதங்கத்தோடு பேசினார்.

- கு.ஆனந்தராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ