Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களே.... மக்கள் பிரசாரம் பார்த்திருக்கிறீர்களா..? - இது புதுசு!

தேர்தல் என்றாலே வேட்பாளர்கள் பிரசாரம் செய்து பாத்திருப்பீர்கள், நடிகர்கள் பிரசாரம் செய்து பார்த்திருப்பீர்கள், ஆனால் மக்கள் பிரசாரம் செய்து பார்த்ததுண்டா?

அரசியல் சொற்கூறுகளில் தலைவர், தொண்டர் என அழைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், யார் தலைவர்? யார் தொண்டர் என்பதுதான் முதல் கேள்வி என்கிறார் ‘இந்திய மக்களாகிய நாம்’ (We the people of India) என்ற இயக்கத்தின் முதன்மை செயலாளரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான கே.ரவி. இந்த இயக்கம் குறித்து விரிவாக பேச சந்தித்தோம்.

“ மக்களிடமிருந்து வாக்குகளை பெறும் வேட்பாளர்தான் உண்மையான தொண்டன். வாக்களிக்கும் மக்கள்தான் உண்மையான தலைவர்கள். இந்த தேர்தலில் இதனை நினைவு கூறும் வகையில் தமிழகத்தில் பத்து பன்னிரெண்டு குட்டி யானைகளில் (டாடா ஏஸ்) ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி மைலாப்பூர், தியாகராயநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் என பல இடங்களில் கடந்த வார இறுதி நாட்களில் பிரசாரம் செய்தோம்

ஒரு மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுபவரிடம், முக்கியமான மூன்று கேள்விகளை மக்களாகிய நாம் கேட்க வேண்டும்.

1. தொகுதியின் மேம்பாட்டிற்கான திட்டம் என்ன வைத்துள்ளார்?

2.வெற்றி பெற்றால் மாதம் ஒரு முறையாவது தொகுதிக்கு குறை கேட்க வருவாரா?

3. கட்சியைவிட மக்கள் நலனில் கவனம் செலுத்துவாரா?

இந்த கேள்விகளுள் கல்வி பற்றிய கேள்வி இல்லை. காமராஜர் போன்ற தலைவர் படிப்பில் உயர்ந்தவர் இல்லை. ஆனால், செயலிலும் சிந்தையிலும் பல நல்லதை நிகழ்த்தியவர். கல்விக்கு அப்பாற்பட்டு அப்படி ஒரு எண்ணம் உள்ளவரை பெற்றிடதான் இந்த முயற்சி. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு வேட்பாளர் நல்ல பதில்கள் அளித்துவிட்டு, பின்னர் பிரசாரம் செய்யட்டும். அவர் பதில் திருப்திகரமாக இருந்தால் வெற்றி வாய்ப்புக் கூடும்; இல்லையென்றால் சரியும். இதனை தமிழகத்தில் பெருவாரியான இடங்களில், அனைத்து தெருக்களிலும் மக்கள் ஒரு பேனர் வைத்து, வாக்கு கேட்க வரும் வேட்பாளரிடம் கேட்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் ஆசை. மக்கள் பிரதிநிதியாக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு கட்சியின் பிரதிநிதியாக அவர்கள் இருப்பது ஒரு அவலம் இல்லையா?” என வினவினார்.

இப்படி ஒரு துணிகரமான பிரசாரம் செய்ய எப்படி யோசனை வந்தது? என்று கேட்டபோது, “1975-ம் ஆண்டு முதல் நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கின்றேன். அண்ணா ஹசாரே , லோக் பால் அமலாக உண்ணாவிரதம் இருந்தபோது, அவரோடு பங்கு பெற்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். அங்கு கிடைத்த தொடர்புகளை மீண்டும் இந்த தேர்தலின்போது புதுப்பித்து 'இந்திய மக்களாகிய நாம்' என்ற இயக்கத்தினை உருவாக்கி தேர்தல் பற்றிய விழிப்புணர்வையும், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தேவையான கவனம் குறித்தும் பிரசாரம் செய்து வருகிறோம். இதில் ஆலோசனை குழுவாக முன்னாள் இந்திய தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், ஆவணப்பட இயக்குனர் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் உள்ளனர்.

அரசியல் கட்சி என்பது அரசியல் சாசனம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமே அல்ல. அது ஒரு குழு மட்டுமே. ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள்  வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வெற்றி பெற்றபின் அவர்கள், அவர்களுக்குள் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டும். ஆனால், இன்றோ தலைகீழாக நிலவரம் மாறி விட்டது. முதலமைச்சர் வேட்பாளர் இன்னாரென முடிவெடுத்து, அவரின் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் நிலை வந்துவிட்டது. இது மிகவும் வருந்த வேண்டிய மாற்றம். அது மட்டுமா?  நிரந்தர முதலமைச்சர் என தம்மை தாமே அறிவிப்பது அரசியல் சட்டத்திற்கு மாறான ஒன்று.

இந்த நிலை மாறிட வேண்டும். கேள்வி கேட்கும் தைரியத்தையும் அதற்கான சுதந்திரத்தினையும், நாம் விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் வளர்க்க தவறிவிட்டோம். இதனை முதலில் பெற்றால் பிறகு ஊழலற்ற ஆட்சி, பொற்கால ஆட்சி ஆகியவை பற்றி கணவு காண்பதோடு நில்லாமல், நம்பிக்கையுடன் அதற்காக சிந்திக்கலாம்.

இதற்காக ஒரு 3 நிமிட வீடியோவை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடத்ததை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள யா அலி ரெசிடென்சி ஹோட்டலில் வேட்பாளருக்கான நேர்முக தேர்வுக்கான ஆயத்தங்கள் நடக்கின்றது" என்றார்

-ச.சந்திரமௌலி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close