Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருத்தர் கூட அதைப் பண்ணாம இருக்கக்கூடாது! ஆணையத்தின் அஜெண்டா

சென்னை: ஒரு வாக்காளர்கூட ஓட்டு போடாமல் இருந்துவிடக்கூடாது என்பதுதான் இந்திய தேர்தல் கமிஷனின் நோக்கம் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் உமேஷ் சின்ஹா கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் உமேஷ் சின்ஹா தலைமையில், தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திதேந்திர ஓஜா, ஸ்வைன், தேர்தல் ஆணைய துணைச் செயலாளர் நிகில்குமார் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னையில் முகாமிட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் உமேஷ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இங்கு தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிப்படையான மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல் நடக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். அந்த அடிப்படையில் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தேன். வாக்காளர்களுக்கு ஓட்டுபோடுவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன ஆயத்தப்பணிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இரண்டு விஷயங்களை இந்திய தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. ஒன்று, புகார் கண்காணிப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியோ அல்லது தனி மனிதனோ கொண்டு வரும் புகார்கள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி அளவிலோ அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி அளவிலோ உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, பொதுக் கூட்டங்கள் உள்பட சில அம்சங்களுக்கு அனுமதி கோரப்படும்போது, அவை 24 மணி நேரத்துக்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இதற்கான ஒற்றைச்சாளர முறை சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாக்காளர்கூட ஓட்டு போடாமல் இருந்துவிடக்கூடாது என்பதுதான் இந்திய தேர்தல் கமிஷனின் நோக்கம். ஒவ்வொரு வாக்காளருக்கும் தங்கள் வாக்குகளை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கென்று தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருப்பது நல்ல உதாரணம். 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு, இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள், வீடியோ குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிக அளவில் பண நடமாட்டம் இருப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை அதிக அளவில் செலவு பார்வையாளர்களை தமிழகத்துக்கு இந்திய தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ளது. சிறப்பு குழுக்கள், பறக்கும் படை ஆகியவையும் ஏராளமான எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களே கண்காணித்து தகவல் சொல்லும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இருந்து, எப்படிப்பட்ட புகார் எந்த வகையில் வந்தாலும், அது உடனடியாக முறையாக கவனிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ