Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கத்தரி வெயில்: 4 முதல் 6 டிகிரி வெயில் அதிகரிக்கும்!

சென்னை: கத்தரி வெயில் காரணமாக, 4 முதல் 6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

கோடை காலத்தின் உச்சக்கட்டம் அக்னி நட்சத்திரம். கத்தரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வழக்கமான வெயில் காலத்தைவிட கத்தரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி இந்த மாதம் 28-ம் தேதி வரை இருக்கும்.

மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாமதித்ததாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகரித்தது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இதையடுத்து, தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியதையடுத்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. இருப்பினும் கோடை காலத்துக்கான இயல்பான வெப்பநிலை சராசரியாக 98 முதல் 100 டிகிரி வரை பதிவாகி வருகிறது. மேலும், கத்திரி வெயில் காரணமாக சராசரி வெப்பத்தின் அளவு தமிழகமெங்கும் 104 முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அக்னி நட்சத்திரம் என்றோ கத்தரி வெயில் என்றோ வானிலையில் இல்லை. அது மூட நம்பிக்கை என்றும் சொல்லவில்லை. அது பற்றி பேசவும் விரும்பவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 சதவீத நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 2 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 111 டிகிரி வெயில் அடித்தது. தென்மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியப்பகுதியில் இன்னும் சில நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்.

காற்றின் ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்று வீசுவதால் சென்னை மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் (4 டிகிரி முதல் 6 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரிக்கும்.

அதாவது காற்றில் உள்ள ஈரப்பதம், கடல்காற்று வீசுதல், மேகங்கள் ஆகியவற்றை பொருத்துதான் வெப்பத்தின் அளவு அமையும். வெப்பத்தை நிர்ணயிக்கூடிய அனைத்தும் பாதகமாக உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். எனவே மக்கள் தேவையில்லாமல் காலை 11 மணி முதல் 4 மணிவரை வெளியில் நடமாடவேண்டாம். அதிக தண்ணீர் குடியுங்கள்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ