Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டு வேணுமா.. ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு!

மிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் கூட்டணிகளை முடிவுசெய்து மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றன. மக்களிடம் வாக்குகளைப் பெற சம்பிரதாயமாக தோலில் கட்சித்துண்டு, உதட்டில் செயற்கையான புன்னகை, கையில் துண்டுப்பிரசுரம், கொசுறாக முகத்தில் ஒரு கெஞ்சல் பார்வை. இப்படிதான் தொகுதி முழுக்க சுற்றிவருகிறார்கள் மாண்புமிகு வேட்பாளர்கள்.

'ஓட்டு போடுறோம்யா' என்று ஒற்றை வார்த்தையை வாக்காளர்கள் உதிர்த்ததும் எம்.எல்.ஏ ஆகிவிட்ட உணர்வோடு நகர்கின்றனர் அங்கிருந்து.

இந்த டெம்ப்ளேட் வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவருகின்றனர் இயற்கை வளப்பாதுகாப்பு கூட்டமைப்பினர்.

சூழலியலாளர் முகிலன் தலைமையில் இயங்கிவரும் 'தமிழ்நாடு இயற்கை வளப்பாதுகாப்பு கூட்டமைப்பு' தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகளை முன்வைத்து பல முன்னெடுப்புகளை செய்துவருகிறது. இந்த அமைப்பு இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு புதிய  திட்டத்தை கையிலெடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 10 நிபந்தனைகள் அடங்கிய உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இயற்கை வளங்கள் பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே எங்கள் ஓட்டு என்று வேட்பாளர்களிடம் அப்போது தெரிவிக்கின்றனர். பொதுமக்களிடமும் துண்டுப்பிரசுரங்களை கொடுத்து தங்களை 'நாடி ஓடிவரும்' வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறும் வகையில் அவர்களிடையே இதுகுறித்த விழிப்பு உணர்வு பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

கிரானைட் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை, தமிழக ஆறு ஏரி குளங்களை பாதுகாப்பது, விவசாயிகளுக்கு எதிரான கெயில், மீத்தேன் திட்டங்களை தடுப்பது, சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகள் அடங்கிய அந்த படிவத்தில் 'மேற்சொன்னவற்றை 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றவில்லையென்றால் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்' என எழுதப்பட்டுள்ளது. உறுதிமொழியில் கையெழுத்திடாத வேட்பாளர்களை புறக்கணிப்போம் என்றும் கிலி கிளப்புகிறது இந்த படிவம்.

தாம்பரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளரிடம் கையெழுத்துப்பெறும் பணியில் இருந்த இந்த அமைப்பின் தாம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் பாரதி கண்ணனிடம் பேசினோம்.

“இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லும் பணிகளை எங்கள் இயக்கம் மேற்கொண்டுவருகிறது.மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடக்குமானால் அது நீருக்கானதாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

4 மாதங்களுக்கு முன் வந்த மழைவெள்ளத்தால் தமிழகமே நீரில் மிதந்தது. ஆனால் இன்று தண்ணீர் பிரச்னை உள்ளது. இது இயற்கையின் விநோதம் அல்ல மனிதனின் சுற்றுப்புறச்சூழல் விழிப்பு உணர்வின்மை. நீரை தேக்கிவைக்கும் சாதுர்யமாக நடவடிக்கைகளை மனிதன் மேற்கொள்ளாததன் விளைவுதான் ஒரு மாநிலத்தை மூழ்கடித்த தண்ணீர் இன்று தேவைக்கு பயன்படாமல் கடலிலும் சாக்கடையிலும் மீதமான நீர் ஆவியாகியும் சேமிக்கப்படாமல் போய்விட்டது. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதுவெல்லாம் மனிதர்களின் பொறுப்பின்மைக்கு உதாரணங்கள். இயற்கை வளமான நீரை ஒரு அரசு விற்பனை செய்கிற அவலம் இங்கு நடக்கிறது.

முல்லைபெரியாறுக்காக கேரளாவிடமும், காவிரி நதிக்காக கர்நாடகாவிடமும், கிருஷ்ணா நீருக்காக ஆந்திராவிடமும் போராடிவருகிறோம். இப்படி இனிவருங்காலத்தில் இருமனிதர்களுக்கிடையிலான இரு மாநிலங்களுக்கிடையிலான , தேசங்களுக்கிடையிலான பிரதான பிரச்னையாக தண்ணீர் மட்டுமே இருக்கும். இதுதான் இன்றைய நிலைமை. தண்ணீர் மனிதர்களுக்குமானதுமட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குமானது. தாகமெடுத்தால் நாம் 20 ரூபாய் கொடுத்து ஆக்வா ஃபினா வாங்கி குடிப்போம். காக்கைகளும் குருவிகளும் எந்த கடைக்கு போகும்.

காக்கை குருவிகளும் மற்ற ஜீவராசிகளும் இல்லாமல் மனித இனம் வாழமுடியாது. ஆனால் இந்த உலகில் மனிதன் இல்லையென்றால் மற்ற எல்லா ஜீவராசிகளும் சுகமாக வாழும். இதுதான் நிதர்சனம். அந்தளவிற்கு சுற்றுப்புறச்சூழலை கெடுப்பதும் இயற்கையின் விதிகளை மீறுவதும் மனித இனம்தான். 

துரதிர்ஷ்டவசமாக  இங்கு வேட்பாளர்களுக்கு தங்கள் பொறுப்பு என்னவென்று தெரியவில்லை. அவர்களிடம் குறையை சொல்வதற்கு கூட பலருக்கும் தங்கள் பிரச்னை என்னவென்றே தெரியவில்லை.

அதற்காகத்தான் இத்தனை கோடி மக்களின் பிரதிநிதியாக மக்கள்மன்றத்திற்கு செல்பவர்களுக்கு தமிழகத்தின் பிரச்னைகள் என்னவென்று தெரிந்துகொள்ளவும் அவர்களுக்கான பொறுப்பை அவர்கள் உணரவும் இப்படி ஒரு விஷயத்தை கையிலெடுத்தோம்.” என்றார்.

நேரடியாக இப்படி கையெழுத்துப் போடுங்கள் என வேட்பாளரிடம் கேட்கும்போது அவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் எனக் கேட்டோம்.

“தாம்பரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் செழியன் மற்றும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது பிலால் இருவரிடமும் கொடுத்து கையெழுத்துப்பெற்றிருக்கிறோம். மற்ற ஒப்பந்த ஃபாரங்கள் தமிழகம் முழுவதிலுமிருக்கிற எங்கள் அமைப்பின் தோழர்கள் பொதுமக்களிடம் விநியோகித்துவருகிறார்கள். மக்களிடையே இதுபற்றிய விழிப்பு உணர்வையும் அவர்கள் ஏற்படுத்திவருகிறார்கள்.

குறைந்தபட்சம் வேட்பாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சொன்னவற்றில் சிலவற்றை செய்தாலும் அது இந்த நோக்கத்திற்கு கிடைத்த வெற்றிதான்” என்று மெல்லிதாக சிரிக்கிறார் பாரதி கண்ணன்.

அட இது புதுசா இருக்கே!!!
 
- எஸ்.கிருபாகரன்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close