Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை: அதிமுக தேர்தல் அறிக்கை பகுதி-3

இதன் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

36. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி

* சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

*முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் துவங்க மானியம் வழங்கப்படும்.

* 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கும் இளைஞர்களுக்கு 25 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

* நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள இடங்களில் அடுக்குமாடி தொழில் வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.

* தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கென தொழிற்குழுமம் மற்றும் தொழிற்பேட்டை அமைத்தால் 10 கோடி ரூபாய் அளவிற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

* சிட்கோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் தொழிற்பேட்டைகளை நிறுவினால் 10 விழுக்காடு வரை மூலதனம் வழங்கப்படும்.

* அம்மா ஈடு உத்தரவாத நிதியம் (Amma Collateral Guarantee
Fund)  100 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடு எதுவுமின்றி கடன் பெற இதன் மூலம் வழி வகை செய்யப்படும்.

* முதல் தலைமுறை மற்றும் இதர சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்  செயல்படுத்தும்  புதுமை  முயற்சிகளுக்கு 500 கோடி ரூபாய் அளவிலான அம்மா முயற்சி மூலதன நிதியம் (Amma Venture
Capital Fund) ஏற்படுத்தப்படும்.

* அரசு மற்றும் அரசு துறைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 20 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஊரகப் பகுதிகளில் குறு தொழில் முனைவோருக்கு முதலீட்டுக்கான கடன் உதவி வழங்கப்படும்.  குறைந்த வட்டியில் கடன் வழங்க ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். குறு தொழில் முனைவோருக்கென தொழிற்கூடங்கள் விலை ஏதுமின்றி வழங்கப்படும்.

* தேயிலை விலை வீழ்ச்சி அடையும் போது, சிறு தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

37. அமைதிப் பூங்காவான தமிழகம்

* தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு யாருடைய தலையீடும்  இன்றி சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பதால் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது.  எவ்வித அச்ச உணர்வு இல்லாமலும் தங்களது சொத்துக்களை பிறர் அபகரித்து விடுவார்களோ என்னும் பயம்  இல்லாமல் வாழ்வதற்கேற்ற சூழல்  தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

* குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.    

38. சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் புதிய வழித் தடங்கள் அமைக்கப்படும்.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை மற்றும் சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இந்த ஆண்டு துவக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் எஞ்சியுள்ள  வழித் தடங்களில் பயணிகள் சேவை படிப்படியாக 2017- ஆம் ஆண்டு முதல் துவக்கப்படும்.

வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான நீட்டிப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பழைய மகாபலிபுரம் சாலை வழியாக மாதவரம் முதல் சிறுசேரி வரை, நெற்குன்றம் முதல் கலங்கரை விளக்கம் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள 88 கி.மீ. நீள மூன்று வழித் தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.   

39. தொலைநோக்கு திட்டம் - 2023

* தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் - 2023ன் கீழ் கண்டறியப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விரைந்த பொருளாதார வளர்ச்சி எய்தப்படும்.   

40. இலங்கை தமிழர்கள்

* இலங்கை தமிழர் இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு  இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதன் பயனாக அவர்கள் தங்கு தடையின்றி வேலைவாய்ப்பு பெற இயலும்.

41. மது விலக்கு கொள்கை

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.  பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும்.  குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.   

42. லோக் ஆயுக்தா அமைப்பு

* ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.

லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

43. ஊரகப் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள்

ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைய புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழில், நெசவுத் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் ஊரக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சானிடரி நாப்கின் மற்றும் அம்மா குழந்தை நலப் பெட்டகத்திற்கான பொருட்கள் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து பெறப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள் வாங்கும் பினாயில் போன்ற சுகாதாரப் பொருட்கள் தயார் செய்ய சுய உதவிக் குழுக்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களிடமிருந்து இவைகள் வாங்கப்படும்.

44. புதிய கிரானைட் கொள்கை

* புதிய கிரானைட் கொள்கை  வகுக்கப்படும்.

கள்ளத்தனமாக கிரானைட் கற்கள் வெட்டியெடுத்தது தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்பு வசூலிக்கப்படும்.  புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.

45. தாது  மணல் கொள்கை

தாது மணல் எடுப்பது தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அரசே தாது மணல் எடுத்து விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளும்.

46. அரசு ஊழியர் நலன்

* மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

* மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறையை  6 மாதங்களாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அது 9 மாதங்களாக உயர்த்தப்படும்.

* அரசு ஊழியர்களுக்கு  வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.   

47. தொழிலாளர் நலன்

* தொழிலாளர் நல வாரியம் மற்றும் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.

* கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் 50  நடமாடும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.  இவை அதிகரிக்கப்படும்.

* கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 3 இடங்களில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.  இவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

48. வழக்கறிஞர் நலன்

* வழக்கறிஞர் சேம நல நிதி 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சத்து  25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது  7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

49. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு

கடந்த 5 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,28,058  இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசுத் துறைகளில் 3,03,111 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.   தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பதிவுகளின்படி 1 கோடியே 8 லட்சத்து 29 ஆயிரத்து  997 பேர் புதிதாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

* இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்  அளிக்கப்பட்டு அதன் மூலம் வேலை பெறுவதற்கும், சுய தொழில் புரியவும் வழிவகை காணப்படும். ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகர்ப் பகுதிகளில் இதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

* கல்லூரிகள் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும்  நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

* வேலை வாய்ப்பு பெறுவதற்கான இணைய வழி பயிற்சி மற்றும் பாடங்கள் கற்பிக்க வகை செய்யப்படும்.

* போட்டித் தேர்வுகளில் ஏழை எளிய மாணாக்கர்களும் திறம்பட தேர்ச்சி பெறும் வகையில்  கட்டணமில்லா வகுப்புகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்.

* 15 லட்சம் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.  அதன் மூலம் அவர்களது பொருள் ஈட்டும் திறன் மேம்படும்.

* அரசு துறைகளால் மேற்கொள்ளப்படும் சிறிய வேலைகளுக்கான பணி ஒப்பந்தங்கள் இவ்வாறான சான்றிதழ் பெற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழிற்சாலைகள் மூலம் 10 லட்சம் பேர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அந்த நிறுவனங்களிலேயே அவர்கள் வேலை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும்.

* அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ‘அம்மா இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் பயிற்சி மையம்’ ஏற்படுத்தப்பட்டு குறுகிய கால பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு சுய தொழில் துவங்க உதவிகள் வழங்கப்படும்.

* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்  10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை  300 ரூபாய் எனவும், 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 400 ரூபாய் எனவும், பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.

* வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச்  செலுத்தும்.

* மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் (Moped/Scooter) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்.    

50. அம்மா பேங்கிங் கார்டு

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் Amma Banking Card வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை  சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.  வாரம் 10 ரூபாய் என்ற அளவிற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய அளவில் இந்தக் கடன் அமையும்.  இந்த Amma Banking Card-ஐ பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதோடு, அனைத்து கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பயன்படுத்தும் விதமாக இந்த Amma Banking Card சேவை வழங்கப்படும்.

-முற்றும்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ