Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகுண்டராஜனுக்கு 'செக்' வைக்கிறாரா ஜெயலலிதா? -தேர்தல் அறிக்கையில் சூசகம்

'தாதுமணல் வர்த்தகத்தை அரசே ஏற்று நடத்தும்' என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'இது அப்பட்டமான தேர்தல் நேரத்து நாடகம்' என விமர்சிக்கின்றனர் வைகுண்டராஜன் தரப்பினர்.

தமிழ்நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படுவதற்கு எதிரான குரல்கள் வலுத்து வருகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் கிரானைட் அதிரடிகளைத் தொடர்ந்து, இயற்கை வளங்கள் கொள்ளை போவதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். 'தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால், மதுவினால் கிடைக்கும் வருமானம் தேவைப்படாது' என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. கடந்த நவம்பர் மாதம் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி இயற்கை வளம் கொள்ளை தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இதையடுத்து, சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்படும் கனிமவளங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, சகாயம் தலைமையிலான சட்ட ஆணையர் குழுவை அமைத்தார் தலைமை நீதிபதி கவுல்.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து களமிறங்கிய சகாயத்திற்கு அனைத்து வகையிலும் தொல்லை கொடுத்தது அரசு இயந்திரம். சுடுகாட்டில் படுத்துறங்கி கிரானைட் நரபலிகளை அம்பலப்படுத்தினார் சகாயம். இதன்பின்னர் பல வாரங்கள் ஆய்வு செய்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார். இது பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது. அந்த அறிக்கையின் முடிவுகளும் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. இதுதவிர, தென்மண்டல கடற்கரையோரங்களில் வெட்டியெடுக்கப்படும் இலுமனைட் உள்ளிட்ட தாதுக்களால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது அ.தி.மு.க அரசு.

அந்தக் குழுவின் அறிக்கையும் இதுவரையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று பெருந்துறை கூட்டத்தில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'தாதுமணல் விற்பனையை அரசு ஏற்று நடத்தும்' என்ற அறிவிப்பால் ஆடிப்போயிருக்கிறார்கள் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தரப்பினர். 'தேர்தலில் அ.தி.மு.கவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதால்தான் அ.தி.மு.க தலைமை இவ்வாறு செய்கிறது' எனவும் கொந்தளிக்கின்றனர்.

அ.தி.மு.கவின் இந்த முடிவு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். பலமாக சிரித்தவர், " இந்தத் தேர்தலின் மிகப் பெரிய காமெடி இதுதான். கிரானைட், தாதுமணல் முறைகேட்டிற்கு முழுக் காரணமே தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான். 'கள்ளத்தனமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்' என்கிறார் ஜெயலலிதா. 'கிரானைட் விற்பனையை அரசே ஏற்று நடத்தும்' என்கிறார் கருணாநிதி. இது அப்பட்டமான ஏமாற்று வேலை.

22 வருடமாக நடந்து வந்த கிரானைட் முறைகேட்டில் 2001 முதல் 2006 வரையில் 77 குத்தகைகளுக்கு அரசாணை கொடுத்தது அ.தி.மு.க அரசு. அதேபோல், 2006 முதல் 2011 வரையிலான 68 குத்தகைகளுக்கு அரசாணை வெளியிட்டது தி.மு.க. இவர்கள் இருவரும் கிரானைட்டில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். 'அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை' என்கிறார் சகாயம். தாதுமணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடி கொடுத்த அறிக்கை எங்கே போனது? இதுவரையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தாரா ஜெயலலிதா?

அரசு ஏற்று நடத்துவதன் மூலம், அவர்களிடம் கமிஷன் வாங்காமல் நேரடியாக கொள்ளை அடிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். மணல் கொள்ளை போலத்தான் இதுவும். தாதுமணல், கிரானைட், மணல் கொள்ளை என எந்தக் கொள்ளையும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. இதுவரையில் நடந்துள்ள கொள்ளைகளை அப்படியே மூடி மறைத்துவிடுவதற்கு வழி சொல்கிறார்கள். 'கிரானைட்டை அரசே ஏற்று நடத்தும்' என்கிறார் கருணாநிதி. அவருடைய பேரன் தயாநிதி பங்குதாரராக இருக்கின்ற ஒலிம்பஸ் கிரானைட் கம்பெனிக்கும் கொடுக்கப்பட்ட 68 உரிமங்களில் பங்கு இருக்கிறது. இதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார் கருணாநிதி? சகாயத்தின் அறிக்கைக்கு இதுவரையில் தி.மு.க, அ.தி.மு.கவிடம் இருந்து பதில் வரவில்லையே? 'சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு' சகாயம் கோரிக்கை வைக்கிறார். இந்தக் கோரிக்கையை ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஏற்றுக் கொள்வார்களா?

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு, முழுக்க முழுக்க வைகுண்டராஜனுக்கு செக் வைக்கும் வேலைதான். ஜெயா டி.வியின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தவர்தான் வைகுண்டராஜன். அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இப்போது நட்பு சுமூகமாக இல்லை. கிரானைட், மணலை விடவும் தாதுமணலில் பல லட்சம் கோடிகள் ஊழல் நடக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா? இதுவரையில் வி.வி.மினரல்ஸ கம்பெனியிடம் அ.தி.மு.க கமிஷன் வாங்கிக் கொண்டு இருந்தது. இப்போது நேரடியாக மணல் கொள்ளை போல, கொள்ளை அடிக்கலாம் என நினைக்கிறார். தாதுமணலை அரசு தாராளமான ஏற்று நடத்தலாம். ஆனால், இவர்கள் செய்தால் கொள்ளை மட்டும்தான் நடக்கும். வேளாண்மை வளர்ச்சி, தொழில்வளர்ச்சியில் அகில இந்திய அளவில் பின்தங்கியிருக்கிறோம். வளர்ச்சி அறிவிப்பை வெளியிடாமல் வெறும் கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா" எனக் கொந்தளித்தார் ஜி.ஆர்.

இதுதொடர்பாக, வைகுண்டராஜன் தரப்பின் வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். " இது தேர்தல் நேரத்து நாடகம். இதை யாருமே நம்ப மாட்டார்கள். எங்கள் சமூகம் அவருக்கு எதிராக இருப்பதால், இதுபோல் செய்கிறார். தாதுமணலை அரசே ஏற்று நடத்த முடியாது. மாநில அரசால் இதில் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. நாங்கள் முறையாக தொழில் செய்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, இதுபோன்ற தேர்தல் நேரத்து அறிவிப்புகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார் உறுதியாக.

தாதுமணல் ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டார் ஜெயலலிதா. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையப் போகும் அரசு ஆட்டத்தைத் தொடருமா? அடங்கிப் போகுமா? என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close