Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனிமக் கொள்ளையில் தி.மு.க., அ.தி.மு.க. பங்கு! பட்டியலிடுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை; கனிம வளக் கொள்ளைக்கு துணை நின்ற திமுகவும் அதிமுகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாது என்று தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் திமுக மற்றும் அதிமுகவிற்கு கனிமவளக்கொள்ளையில் உள்ள பங்களிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள சுரண்டல்கள் கடந்த 20 ஆண்டு காலத்தில் அரங்கேறியுள்ளன. அவற்றில் கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.1.06 லட்சம் கோடியாகும். தாதுமணல் கொள்ளையும், ஆற்றுப்படுகைகளில் நிகழ்த்தப்பட்ட மணல் கொள்ளையும் மேலும் பல லட்சம் கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இயற்கைச் சூழலை சிதைத்து சுற்றுச் சூழல் சமநிலைக்கும் ஆபத்தை விளைவித்துள்ளன.

விற்கப்பட்ட தாதுமணலில் தோரியம் மட்டும் ரூ.60 லட்சம் கோடிகள் இருக்கும் என்று மத்திய அரசின் அணுசக்தித் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுரண்டல் மிகப்பெருமளவில் நடைபெற்ற காலம் 2002 முதல் 2012 காலகட்டமாகும்.

இந்த முறைகேடு வெளிவந்த பின்னர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாதுமணல் குவாரிகளில் ஒரு மாதம் ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடி குழு அங்கு தாது மணல் கொள்ளை நடந்திருப்பது உண்மை தான் என்று 17.09.2013 அன்று அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை விபரங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளன. இந்த அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்த அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று கூறுவது மக்களை ஏமாற்றவே.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து சட்டமன்றத்தில் பலமுறை கேள்வியெழுப்பியும், அதற்கான சரியான பதிலை கூறாதது மட்டுமல்ல கனிமவளக் கொள்ளையால் களவாடப்பட்ட வளங்களை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விசாரணையை தாமதப்படுத்தவும், விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காததுமே தொடர்கதையாக இருந்துவந்தது.

அரசு நிர்வாகத்தின் பல மட்டங்களிலும் இந்த ஊழலோடு தொடர்புடையவர்கள் பணிபுரிகின்றனர். இதன் காரணமாகவே, கனிமவளக் கொள்ளையை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்தை நாடியது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, ஊழல் முறைகேடுகளைத் தடுப்பதுடன் - ஊழலால் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாத திமுகவும், அதிமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சில கண் துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

தனியார் - அரசு கூட்டு ஏற்படுத்தி கிரானைட் வெட்டப்படும் என்று திமுகவும், புதிய கிரானைட் கொள்கை ஏற்படுத்தி அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்போம் என்று அதிமுகவும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன. மேலும், தாது மணலை அரசே எடுத்து விற்பனை செய்யும் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அப்படி அவர்கள் செய்தாலும், தற்போது ஆற்று மணல் எடுத்து விற்பதைப் போலத்தான் அதுவும் நடைபெறும் - கொள்ளை வேறுவடிவில் தொடரும்.

கிரானைட் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் மிக அதிகமாக நடைபெற்று ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்தில் - திமுக மத்திய, மாநில ஆட்சிகளிலும், அதிமுக மாநில அதிகாரத்திலும் இருந்துள்ளனர். அனைத்து விதமான அதிகாரங்களும் தவறாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறி மாறி ஆட்சியிலிருந்தபோது, கனிமவளக் கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவும் - அதிமுகவும் தங்கள் அறிக்கைகளில் மேம்போக்காக இந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளன.

இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே ஆகும். மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால், முறைகேடுகளை மூடி மறைக்கவே தங்கள் அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பது வெள்ளிடை மலை. திமுக - அதிமுக காட்டும் மாய்மாலங்களுக்கு தமிழக மக்கள் பலியாகமாட்டார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ