Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெயலலிதா வாக்குறுதி, குமாரசாமிகளை உருவாக்கும்!' -சலசலக்கும் நீதியரசர் சந்துரு

ஊழல் செய்தால் முதலமைச்சரையே தண்டிக்கும்  லோக் ஆயுக்தா சட்டம் பற்றிக் கவலைப்படாத தி.மு.கவும் அ.தி.மு.கவும், தற்போதைய தேர்தல் அறிக்கையில் அதிரடியாக அறிவித்துள்ளன. 'தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. சாத்தான் வேதம் ஓதும் கதைதான்' என்கிறது மக்கள் நலக் கூட்டணி.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் அமலில் இருக்கிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சிறைக்கு அனுப்பிய பெருமை இந்தச் சட்டத்திற்கு உண்டு. ஆனால், இந்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த எந்த ஆளுங்கட்சியும் நடவடிக்கை எடுத்ததில்லை. காரணம். ஆளுங்கட்சிகள் மீது அதிரடியாகக் கிளம்பும் ஊழல் புகார்கள்தான். அப்படி ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் முதலமைச்சர், அமைச்சர், அரசு ஊழியர் என யாரும் தப்ப முடியாது. தேர்தலுக்காக நமக்கு நாமே பயணம் சென்ற ஸ்டாலின், 'லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்' என அறிவித்தது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. 'ஊழலற்ற நிர்வாகத்திற்கு இதுபோன்ற சட்டங்கள் அவசியம்' என படித்த வர்க்கத்தினர் பெரிதும் நம்புகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.கவும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது, அரசியல் அரங்கில் அதிர்வலையைக் கிளப்பியுள்ளது.

'இவர்களின் வாக்குறுதியை எந்தளவுக்கு நம்புவது?' என்ற கேள்வியை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவிடம் கேட்டோம். " இவர்கள் மட்டுமல்ல. இன்று தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் அவர்கள் வெற்றி பெற்றால் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம் என்று தேர்தல் உறுதிமொழி அளித்துள்ளனர். எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. 1972-ல் பொது ஊழியர்கள் (முதலமைச்சர் உட்பட) யார் தவறு செய்தாலும் அவர் மீது புகார் பெறப்பட்டால் விசாரித்து மூன்று வருடம் சிறைத்தண்டனை வழங்கும் சட்டத்தை அன்றைய கருணாநிதி அரசு கொண்டுவந்தது. அச்சட்டத்தின்படி யாருமே புகார் அளிக்க முன்வரவில்லை. ஏனெனில் கொடுத்தது பொய்ப் புகாரென்றால் புகார் அளித்தவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை என்று அச்சட்டம் கூறியதுதான் காரணம். பின்னர் இரண்டு வருடத்தில் அச்சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு கருணாநிதி அரசு மீதும், எம்.ஜி.ஆர் அரசு மீதும் மாறி மாறி இரு கட்சிகளும் ஊழல் புகார்களைக் கூறிவந்தனர்.  ஆனால் ஒருவருமே தண்டிக்கப்படவில்லை.

தற்போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஊழல் குற்றங்களில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சராவதற்காக 93 வயதில் பிரச்சாரம் செய்துவரும் கருணாநிதியின் குடும்பத்திலும், கட்சியிலும் பலரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகின்றனர். 'இவர்கள் ஊழலை ஒழிப்பேன்' என்று கூறுவதும், 'அதற்கு முதல்கட்டமாக லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம்' என்று கூறுவதும் ஏமாற்று வேலை. அதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியே ஒரு சட்டம் இயற்றினாலும் அதில் ஆயிரம் ஓட்டைகள் வைத்திருப்பார்கள்.   அச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்படப்போகும் நீதிபதிகளும் குமாரசாமிகளின் வாரிசுகளாகவே இருப்பார்களென்பதில் சந்தேகமில்லை" என்றார் ஆதங்கத்தோடு.

ஆனால், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம், " அ.தி.மு.கவும் தி.மு.கவும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்வது சாத்தான் வேதம் ஓதுவதைப் போலவும் கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவது போலவும் இருக்கிறது. இவர்கள் இருவரையும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்தாலே ஊழலை ஒழித்துவிட முடியும். லோக் ஆயுக்தாவை சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு, நெறிமுறைகுழுவை உருவாக்க இருக்கிறோம். தவறு நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விடவும், தவறே நடக்காமல் தடுப்பதுதான் நெறிமுறைக்குழுவின் வேலை. அதை நாங்கள் செயல்படுத்துவோம்" என்கிறார்.

கசாப்புக்கடைக்காரர்களின் ஜீவகாருண்யம் எடுபடுமா? என்பதெல்லாம் மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close