Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநகராட்சி அதிகாரியிடம் கார் பார்க்கிங் கட்டணம் கேட்டால் என்ன நடக்கும்? - ஸ்கைவாக் பரபரப்பு

‘ஆம்பா ஸ்கைவாக்’ ஷாப்பிங் மால், சென்னையின் பிரம்மாண்டமான வணிக வளாகங்களில் முக்கியமானது. 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட ஆறு மாடிகளை கொண்ட கட்டடம். 7 தியேட்டர்கள், ஹோட்டல்கள், ஆடையகங்கள் என்று நூற்றுக்கணக்கான கடைகள் இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனை முழுவதும், அந்த மாலில் செயல்படும் ஹோட்டல்களை குறி வைத்து நடைபெற்றன. அதன்பிறகு, அங்கிருந்த 32 ஹோட்டல்களுக்கு சீல் வைத்துப் பூட்டுப்போட்டனர். காரணம், அந்தக் கடைகளில் தரம் குறைந்த வகையில் உணவுப் பொருள்கள் இருந்ததாகவும், சில கடைகளுக்கு உரிய அனுமதி இல்லையென்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. அதன்பிறகு, மெக்டொனல்ட், கே.எப்.சி உள்ளிட்ட வெளிநாட்டுக் கம்பெனிகள் மட்டும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது. அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சார்பில், அவர்கள் முறையாக லைசென்ஸ் வைத்துள்ளனர். அதை எங்களிடம் மறுநாள் வந்து காண்பித்தனர். அத்துடன் அவர்கள் தரமான முறையில்தான் உணவுகளைத் தயாரிக்கின்றனர் என்று பின்வாங்கினார்கள். ஆனால், மற்ற கடைகளுக்கு போடப்பட்ட பூட்டுக்கள் இன்னும் திறக்கப்படவில்லை.


இதுபற்றி கடைக்காரர்கள் தரப்பில் விசாரித்தோம்.

அவர்கள், “ ஆம்பா ஸ்கைவாக் சென்னையில் முக்கியமான ஷாப்பிங் மால். இங்கு சாதாரண பொதுமக்கள் முதல் வி.ஐ.பி.க்கள் வரை வருகின்றனர். அதனால், தரம் குறைந்த உணவுப்பொருள்களை இங்கு யாரும் விற்க முடியாது. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைக்கு காரணம் வேறு. சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கண்ணன், சில நாட்களுக்கு முன், இங்கு சிலரைச் சந்திப்பதற்காக வந்தார். அப்போது அவரது காரை, ஷாப்பிங் மால் ஊழியர்கள் சிலர் மறித்து, கட்டணம் கேட்டுள்ளனர். அவர், தான் கார்ப்பரேஷன் டி.சி என்று சொன்னதை, கார் பார்க்கிங்கில் இருந்த ஊழியர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போதே அந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டது.

அதன்பிறகு கூட்டம் கூடியதும், இந்த வணிக வளாகத்தின் உரிமையாளரே நேரில் வந்து டி.சி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டார். அதோடு டி.சியின் காரை மறித்த ஊழியரையும் மன்னிப்புக் கேட்க வைத்ததோடு, மன்னிப்புக் கடிதமும் கொடுத்தார். ஆனாலும் டி.சி கண்ணனுக்கு கோபம் குறையவில்லை. மறுநாளே, மாநகராட்சி உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் எங்களை படுத்தி எடுத்துவிட்டனர். அத்துடன் கடைகளையும் பூட்டி சீல் வைத்துவிட்டனர்.

இந்த விவகாரத்தை மாநரகாட்சி ஆணையளர் வரை நிர்வாகம் கொண்டு சென்றுள்ளது. ஆனால், அவர்கள் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஒரு அதிகாரியின் காரை, ஒரு சாதாரண ஊழியர் விவரம் தெரியாமல் மறித்தது தவறுதான். ஆனால், அதற்காக எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அதிகாரி கண்ணனின் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு ஒரு நாளைக்கு பல ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படுகிறது"  என்று புலம்பினர்.

உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு....

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ