Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை... வி.சி.யினர் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!

சென்னை: வெற்றி வாய்ப்பு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ம.க.வின் அரூர் தொகுதி வேட்பாளர் முரளி சங்கர் மீது தாக்குதல் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சி செய்த சம்பவம் கண்டனத்துக்குரியது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை படுகொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் முரளி சங்கர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரை 87484 22217 என்ற செல்பேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட சிலர், அரூர் தொகுதியில் பா.ம.க.வுக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்காக தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். அதேகும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்நாள் இரவு முரளி சங்கர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களின் செயல்கள் ஐயமளிக்கும் வகையில் இருந்ததை கண்ட முரளி சங்கரின் தந்தை, அவர்களை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். முரளிக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அப்போது முரளி சங்கர் வீட்டில் இல்லாததை தெரிவித்த அவரது தந்தை, இரவு நேரத்தில் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் பகலில் வரும்படியும் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரத்தில் அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததை பார்த்த தந்தை, அக்கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும், அவர்களை சந்திக்க வேண்டாம் என்றும் முரளிசங்கரை அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அரூர் பேரூந்து நிலையம் அருகில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முரளிசங்கர், நேற்றிரவு 10 மணிக்கு சந்தைமேடு என்ற இடத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அந்த நேரத்தில் TN67 - L504 என்ற எண் கொண்ட ஸ்கார்ப்பியோ வாகனத்தில் வந்த சிலர் வேட்பாளரையும், அவருடன் வந்தவர்களையும் சுற்றி வளைத்துள்ளனர். வேட்பாளர் முரளி சங்கரின் உறவினரான மதி என்பவர் மீது அந்தக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்றபோது, வேட்பாளர் முரளிசங்கரும், அவருடன் வந்தவர்களும் எச்சரித்ததால் மதி  விலகி நின்று உயிர் தப்பினார். இதையடுத்து தாக்குதல் நடத்த வந்தவர்களை அங்கிருந்த பா.ம.க.வினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். சந்திர சேகர், மருதுபாண்டி ஆகிய இருவர் மட்டும் பிடிபட்ட நிலையில், வாகனத்தில் வந்த மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் வந்த வாகனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியும், பயங்கர ஆயுதங்களும் இருந்தன. அவற்றை அரூர் காவல்நிலையத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

அரூர் தொகுதி வேட்பாளர் முரளி சங்கரை படுகொலை செய்யும் நோக்கத்துடனேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது. வேட்பாளருடன் வந்த பா.ம.க. தொண்டர்களும், வேட்பாளரின் காவலுக்கு வந்த காவலரும் அக்கும்பலை மடக்கிப் பிடித்திருக்காவிட்டால், வேட்பாளர் முரளிசங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலை சிறுத்தைகள் என கூறப்படுகிறது. அவர்கள் வந்த வாகனத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சிக் கொடி கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்தது இதை உறுதி செய்கிறது. அரூர் தொகுதியில் பா.ம.க.வின் வெற்றிவாய்ப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றிருப்பதாக தெரிகிறது.

இந்த கொலை வெறித் தாக்குதல் முயற்சி தொடர்பாக பிடிபட்ட இருவர் தவிர மற்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதையும் காவல்துறை கண்டு பிடித்து கைது செய்வதுடன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ