Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரு கட்சிகளின் ஊழலுக்கு தண்டனை வழங்க ஆறு கட்சி கூட்டணி வெற்றி பெறனும்: பிரகாஷ் காரத்

திருப்பூர்: அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் செய்த ஊழலுக்கு விசாரணை நடத்தி தண்டனை வழங்க ஆறு கட்சி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறியுள்ளார்.

தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவை, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத மாற்று அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு இந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் ஊழலில் ஊறித் திளைக்கின்றன. மேலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் திராவிட இயக்கத்தின் முற்போக்கு, ஜனநாயகப் பாரம்பரியத்தில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன.

எனவே, கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா அணி நம்பகமான மாற்றாக உருவாகியுள்ளது. ஐந்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாகவில்லை, விவசாயிகள் துயரம் அதிகரித்துள்ளது. ஊழல் நிறுவனமயமாகியுள்ளது.

இந்த ஆறு கட்சிகள் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது புதிய அரசியல் அத்தியாயமாகத் திகழும். கேரளத்தில் 1960-ம் ஆண்டுகளில் இருந்தே கூட்டணி ஆட்சி தான் இருக்கின்றது. அங்கு பெரிய கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஒரு அணியும், அதற்கடுத்த கட்சியான காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் உள்ளன. கூட்டணி ஆட்சி எனும்போது தவறுகளை கண்காணித்து தடுத்து நிறுத்த முடியும்.

தற்போது மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. இந்த அரசு பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதற்காக கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் சாமானிய மக்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதைப் பற்றி தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க வாய் திறப்பதில்லை. மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க மட்டுமல்ல, தி.மு.க.வும் அதை எதிர்த்து வாய் திறக்கவில்லை.

அத்துடன் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்பு நாடு முழுவதும் திட்டமிட்ட முறையில் சிறுபான்மை மக்கள், அறிவுஜீவிகள் மீது தாக்குதல் என வகுப்புவாதப் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழகத்தில் தற்போது கூட்டணி அமைத்துள்ள இந்த ஆறு கட்சிகளும் மதசார்பற்ற கட்சிகளாகும். தமிழகத்தில் இந்த தேர்தலில் ஏதோ வகையில் அணி சேர்க்க முயன்ற பா.ஜ.க இந்துத்துவ அரசியலுக்கு எதிராக மதசார்பற்ற இந்த அணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சட்டவிரோதமாக சேர்த்த ஊழல் கறுப்புப் பணத்தை பெருமளவு செலவிட்டு அரசியலையும், தேர்தல் நடைமுறையையும் களங்கப்படுத்தியுள்ளன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பண பலத்தைக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறப் பார்க்கிறார்கள். இதற்கு எதிராக ஆறு கட்சிக் கூட்டணி மக்களிடம் சென்று பிரசாரம் செய்து இந்த அணி வெற்றி பெறப் பாடுபட வேண்டும்.

ஒருவேளை அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க வெற்றி பெறுமானால் அவர்கள் மீதான உயர்மட்ட ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் இந்த இரு கட்சிகளும் ஊழலில் சகோதரர்களாக உள்ளன. இரு கட்சிகளின் ஊழல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆறு கட்சி கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்த அணி வெற்றி பெறும்போதுதான் உயர்மட்ட ஊழல் மீது நடவடிக்கை எடுத்து குற்றம் செய்தவர்களை தண்டிக்க முடியும்'' என்றார்.

ச.ஜெ.ரவி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ