Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதானிக்கு ஏன் அதிக சலுகை..? -கருணாநிதியின் கேள்வி!

சென்னை: மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை,  யூனிட் ஒன்றுக்கு தமிழ்நாட்டு விலையைவிட இரண்டு ரூபாய் குறைவாக வாங்கிய நிலையில், அதானி குழும நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கக் காரணம் என்ன? என்று கருணாநிதி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மின்சார வாரியத்திற்காக நிலக்கரி வாங்குவதில் எந்த அளவுக்கு ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றன என்று விரிவாக நான் தெரிவித்ததற்கு எந்தவிதமான பதிலும் முதலமைச்சரிடமிருந்தோ, அமைச்சரிடமிருந்தோ இதுவரை வரவில்லை. இப்போது சொல்லாவிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு, இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக் கமிஷன் அழைத்துக் கேட்கும்போது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அதே மின்சார வாரியத்தில் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதிலே தமிழக அரசுக்கு 7,576 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்து இப்போது தெரிவிக்கிறேன். இதற்காவது ஆளும் தரப்பில் பதில் வருகிறதா என்று நீங்களே பாருங்கள்!

மொத்தம் 3,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது. ஒப்பந்தப் புள்ளியின் தேதி 5-12-2012 முதல் 2-1-2013 வரை என்று முடிவு செய்தார்கள். ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கும், அதனைத் திறப்பதற்கும் கடைசி தேதி 4-1-2013 என்று முடிவு செய்யப்பட்டது. பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் 52 ஒப்பந்தப் புள்ளிகளை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தேர்ந்தெடுத்து, அந்த 52 ஒப்பந்ததாரர்களுக்கும் 708 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் ரூ.6.48 என்ற விலைக்கு உற்பத்தி செய்து வழங்குவதற்கும், அவ்வாறு வழங்கும் விலையில் 1-4-2014 முதல் பத்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வருடத்திற்கும் 5 சதவிகிதம் விலையை அதிகப்படுத்தவும் ஒப்புக்கொண்டு அவர்களுக்கெல்லாம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இத்தனை நடவடிக்கைகளும் முடிந்த பிறகு இதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களிடமிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  மின்சாரம் வாங்குவதற்கான ஒட்டுமொத்த விலை மற்றும் நடைமுறைகள் சம்பந்தமாக 12-9-2014 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஓர் ஆணையைப் பிறப்பிக்கிறது. முதலில் அணுகும் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்கு முன் உரிமை வழங்கப்படுவதோடு, நிர்ணயிக்கும் விலை முன்னுரிமை கட்டண விலை என்று அழைக்கப்பட்டு, அதன் விலை ரூ.7.01 எனவும், இது 31-3-2015 வரையில் நிலுவையில் இருக்கும் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தியாளர்களுடன் செய்து கொள்ளப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியபோது, அந்த ஒப்பந்தங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து செய்யப்பட வில்லை என்ற காரணத்தால் 15-9-2014 நாளிட்ட ஆணையில் நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலை விகிதத்தில், அதே ஒப்பந்ததாரர்களுடன் தொடர்வது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவுசெய்து, அனைத்து ஒப்பந்ததாரர்களையும் முன்னுரிமை கட்டண விலைக்கு (ரூ.7.01) மாற்றிக்கொள்ளுமாறு தெரிவித்து கடிதம் அனுப்பியது.

ஜூலை 2015-ல், அதானி நிறுவனத்துடன், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது முதலாகவே இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. தற்போது புதிதாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் விதத்தில் உள்ளது.

பொதுவாக ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவை. அதன்படி அதானி நிறுவனம் 648  மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய 3,240 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். 7-10-2014 தேதிய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நடவடிக்கைபடி, Load Flow Study (மின்னோட்டப் பகுப்பாய்வு) செய்த பின்பும், பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தப்பட்ட பின்பும், நிலத் தேவையைப் பூர்த்தி செய்த பிறகுமே முதுநிலை முடிவு செய்யப்படும். இந்தத் தேவைகளையெல்லாம் அதானி குழுமம் நிறை வேற்றியுள்ளதா என்றால் கிடையாது.

Load Flow Study (மின்னோட்டப் பகுப்பாய்வு) செய்யாமலும், நிலத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமலும் எந்த ஒரு ஒப்பந்தமும் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுடன் செய்துகொள்ள முடியாது என்று அந்தத் துறையின் அமைச்சரே தெரிவிக்கும் நிலையில், அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்யாத நிலையில், 4-7-2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டது சரியா?

4-7-2015 அன்று தமிழக அரசு அதானி குழுமத்துடன் 4536 கோடி ரூபாய் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப்பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தபோதுதான் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மத்தியபிரதேச அரசுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.04 என்ற விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க இதே அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதானி நிறுவனத்தின் இந்த விலைப்புள்ளியை நிராகரித்த மத்தியப்பிரதேச அரசு, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா என்ற நிறுவனத்தோடு, ஒரு யூனிட் 5.05 என்ற விலையில், 25 ஆண்டுளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது உண்மையா இல்லையா?

அதானி நிறுவனம், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்சாரப் பூங்காவை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்க நிலங்களை வாங்கத் தொடங்கியது. இவ்வாறு நிலம் வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இடைத்தரகர்கள் இடையில் புகுந்து குறைந்த விலைக்கு நிலத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதானி நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

சில மாதங்களுக்கு முன்பு  சென்னை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு ஒன்று, இந்தக் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. அதானி நிறுவனத்தின் சார்பாக, நில ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு கபிலன் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் கபிலன் அதானி நிறுவனம் தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் சார்பாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது பல்வேறு சுவையான தகவல்கள் கிடைத்தன.

சென்னை அண்ணாசாலையிலிருந்து செயல்படும் கபிலன் அசோசியேட்ஸ் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் உரிமையாளர் வழக்கறிஞர் கபிலன். அதானி நிறுவனம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வாங்கப்படும் நிலங்களின் ஆவணங்களை சரிபார்த்து தருவதற்காக கபிலன் நியமிக்கப்படுகிறார். கபிலனுக்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூபாய் 6000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இக்கட்டணத்தின் அடிப்படையில் கபிலனுக்கு அதானி நிறுவனம் 70 லட்ச ரூபாயை அளித்திருக்கிறது. இந்நிலையில், கபிலன் அதானி நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூபாய் 15,000 வேண்டும் என்றும், அவ்வாறு தரத் தவறினால் அதானி நிறுவனம் அமைக்கும் சூரிய ஒளி மின் பூங்காக்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிடுவேன் என்றும், அவ்வாறு வெளியிட்டால், அதானி நிறுவனம், தமிழகத்தில் சூரிய ஒளி மின் பூங்கா அமைக்கும் திட்டத்தையே கைவிட வேண்டி வரும் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.

அதானி நிறுவனத்துக்கு கபிலன் எழுதிய கடிதத்தில், “சூரிய ஒளி மின் பூங்கா அமைப்பதற்காக நிலம் வாங்கியதில் பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்துள்ளன. மின்சாரம் வாங்குவதற்காக தமிழக மின் வாரியத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல்வேறு சட்டவிரோதமான ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இந்த சட்டவிரோதமான ஆவணங்களின் அடிப்படையிலேயே ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விலைக்கு அதானி நிறுவனத்தோடு மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த ஒப்பந்தத்தின் அடிப் படையிலேயே “இந்தஸ் இந்த்” வங்கியிலிருந்து 2303.98 கோடி, “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா”விலிருந்து 1000 கோடி, “யெஸ்” பேங்கிலிருந்து 500 கோடி மற்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கியிலிருந்து 803.98 கோடி கடன் பெற்றுள்ளது அதானி நிறுவனம்.

இவ்வாறு கடன் பெறப்பட்டதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. செபி விதிகள், ஒப்பந்த விதிகள், போன்ற பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன.    இந்த விதி மீறல்கள் ஒரு துளி மட்டுமே. தமிழக மின் வாரியம், இதர அரசுத் துறைகள், பொது நல வழக்கு தொடுக்கும் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் போன்றவற் றிற்கு இத்தகவல் தெரிந்தால், அதானி நிறுவனம் தமிழக அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நிலை ஏற்படும். பூர்வாங்க விசாரணை நடத்தி னாலே, தமிழக மின் வாரியத்தை அதானி நிறுவனம் எப்படி ஏமாற்றியிருக்கிறது என்பது தெரிந்து விடும் என்று கபிலன் அதானி நிறுவனத்துக்கு அப்போது எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகல்சாமி, இந்த ஒப்பந்தம் நடந்தபோதே, இந்த ஒப்பந்தத்தினால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு 25 ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கும் என்று கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்திவிட்டு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நான், “அ.தி.மு.க. அரசு அதானி குழுமத்தோடு அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அந்தக் குழுமத்திற்கு சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக, மோசடியாக இந்த மின் திட்டத்தை எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளிகளும் கோராமல் அளித்திருக்கிறது என்பதை இந்த வழக்கிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு அளித்தது பற்றி சட்டப்படியான குற்ற விசாரணை நடைபெற்று, மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் வெளிக் கொணரப்பட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சூரிய ஒளி  மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.05 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல் முறையீடோ அல்லது அந்த விலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலோ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் செய்யவில்லை?

அடுத்து, உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு மறு டெண்டர் கோரியது. அதுபற்றி, சதர்ன் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்ட்யூட் திரேசே கன்சார்டியம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தங்கள் நிறுவனம் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்த போதிலும், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே மறு டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டபோது, உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, புதிய டெண்டர் விட இடைக் காலத் தடை விதித்தார். வழக்கு முடியும் வரை புதிய டெண்டர் விடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது சரியா? யாரை ஏமாற்ற இந்த இரண்டாவது ஒப்பந்தப் புள்ளி?அமைச்சருக்கு வேண்டிய உறுப்பினர்களான அக்சயகுமார் மற்றும் ஜி.ராஜகோபால் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், முன்னுரிமை கட்டண விலையான ரூ.7.01  என்பதன் கால வரம்பை 1-4-2015 முதல் 31-3-2016 வரை என்று தன்னிச்சையாக நீட்டித்திருப்பது உண்மையா இல்லையா?  அவ்வாறு காலத்தை நீடித்து தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கச் சொன்னது யார்?

இவ்வாறு பிறப்பித்த உத்தரவு, சட்டத்திற்குப் புறம்பானது என்றும், தேவையற்றது என்றும், அந்த உத்தரவு  சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகப் பிறப்பிக்கப்பட்டது  என்றும், இதனால் அரசுக் கருவூலத்திற்குப் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும் ஆணையத்தின் மற்றொரு உறுப்பினரான நாகல்சாமி 1-4-2015 அன்று உத்தரவிட்டுள்ளாரா? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு தமிழ்நாட்டு விலையை விட இரண்டு ரூபாய் குறைவாக வாங்கிய நிலையில், அதிக விலை கொடுத்து வாங்கக் காரணம் என்ன? 947 மெகாவாட் மின்சாரத்தை இந்த விலைக்குக்கொள்முதல் செய்தால் அரசு கஜானாவிற்கு, 7,576 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுமா? இல்லையா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்