Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாக்காளர்களுக்கு பணம் கொடு்த்தால் கைது! ஆணையம் அதிரடி

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடு்த்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி எச்சரித்து உள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில், 3.29 லட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கான தபால் வாக்குகள் விநியோகிக்கும் பணி கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளன. சென்னையில் இதுவரை 60 சதவீத அளவுக்கு தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் மட்டும் 19 ஆயிரத்து 951 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு வரும் 12, 14 ஆகிய தேதிகளில் மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளின்போதும் அவர்கள் தங்களிடம் உள்ள தபால் வாக்குகளை அங்குள்ள பெட்டியில் போடலாம்; அல்லது தபாலில் அனுப்பலாம். ஒட்டு எண்ணும் நாளான 19-ம் தேதி காலை 7 மணிக்குள் அந்தந்த தொகுதிக்கு வந்து சேருமாறு தபால் வாக்குகளை அனுப்ப வேண்டும். தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அவரவர் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம். அவர்களை யாரும் இப்போதே வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தவோ, வற்புறுத்தவோ முடியாது

தமிழகம் முழுவதும் தினமும் ‘பூத் சிலிப்’புகள் 10 முதல் 15 சதவீதம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. ‘பூத் சிலிப்’புகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை வினியோகிக்கப்படும். வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலுக்கு பிறகு ஒரு மாதத்துக்குள் மொத்த செலவு கணக்குகளையும் வேட்பாளர்கள் கொடுக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பண நடமாட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 234 தொகுதிகளிலும் பறக்கும் படையினர் எண்ணிக்கை 3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவை கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு மத்திய செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இவர்கள் தவிர 118 பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் பறக்கும் படையில் இடம் பெற்று உள்ளனர். ஒவ்வொரு பறக்கும் படையிலும் தமிழக போலீசாருக்கு பதிலாக துணை ராணுவ வீரர் இடம் பெற்று உள்ளார். இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது. இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு முன்பாக வருகின்ற 14 மற்றும் 15-ம் தேதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் மண்டல குழுக்கள் செயல்படும். அந்த குழுவில் 4 அரசு பணியாளர்கள், ஒரு போலீஸ்காரர், ஒரு நுண் பார்வையாளர் என மொத்தம் 6 பேர் இடம் பெற்று இருப்பார்கள். 8 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல குழு வீதம் நியமிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் இனி வீடு, வீடாக பணம் கொடுப்பார்கள் என்ற தகவல் கிடைத்து உள்ளது. ஒரு தொகுதியில் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணம் கொடுப்பதாக தகவல் வந்தால் அதை ஏற்கனவே உள்ள 5 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினரால் தடுக்க முடியாது என்பதால் புதிதாக மண்டல குழுவினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஒரு தொகுதிக்கு 20 முதல் 25 மண்டல குழுவினர் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களை 14-ம் தேதிக்கு பதிலாக 12-ம் தேதியே பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் மொத்தம் 5,644 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஒவ்வொரு தொகுதியிலும் செயல்பட்டு வரும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினரும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை கண்காணிப்பார்கள்.

இதன் மூலம் வீடு, வீடாக பணம் கொடுப்பதை தடுக்க முடியும். மண்டல குழுவினர் பறக்கும் படையினர் போன்று செயல்படுவார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் கையும், களவுமாக பிடிபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் 94 தொகுதிகளில் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3-லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், அந்த தொகுதிகளில் கூடுதலாக 20 முதல் 25 மண்டல குழுக்களும் செயல்படும்.

ஒரு இடத்தில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்துக்கு பறக்கும் படையினர் விரைந்து செல்வார்கள். இதற்கிடையில் அதுபற்றிய தகவல் வருமான வரித்துறை குழுவுக்கும், அந்த தொகுதி தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் அங்கு விரைந்து செல்வார்கள். பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் இடத்தில் சட்டப்படி வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்த முடியும். அதனால் தான் எந்த மாநில சட்டசபை தேர்தலிலும் இல்லாத நடைமுறையாக இந்த தேர்தலில் வருமான வரித்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து செல்போன் நிறுவன ஏஜெண்டுகள் ரீ-சார்ஜ் செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு டோக்கனுக்கு பெட்ரோல் வினியோகித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 700 ‘டோக்கன்’கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ