Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஜெயலலிதாவை மட்டும் விமர்சியுங்கள்...!' -பா.ம.கவுக்கு தி.மு.கவின் 'திடீர்' உத்தரவு

'அ.தி.மு.க ஆட்சியில் ராமதாஸுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மட்டும் பிரசாரம் செய்யுங்கள். இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்' என பா.ம.க நிர்வாகிகளுக்கு தி.மு.க ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சி நிர்வாகிகளை வளைக்கும் தி.மு.கவின் முயற்சியை அறிந்து கொந்தளிப்பில் இருக்கிறார் ராமதாஸ்.

தி.மு.கவின் வட மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த வாரம் ஓர் அவசர அழைப்பு. பா.ம.கவின் வலுவான தொகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க தலைமை சில அறிவுறுத்தல்களை சொல்லியிருக்கிறது. தர்மபுரி, பென்னாகரம், ஜெயங்கொண்டம்,  குன்னம் உள்பட சில தொகுதிகளைத் தவிர்த்து, சுமார் நாற்பது தொகுதிகளில் பா.ம.கவின் இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டது தி.மு.க தலைமை.

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய தி.மு.க மாவட்ட நிர்வாகி ஒருவர், " தனித்துப் போட்டி, முதல்வர் வேட்பாளர் என ராமதாஸ் எடுத்த முடிவுகளால், பல தொகுதிகளில் பா.ம.கவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். கடந்தமுறை தி.மு.க கூட்டணியில் முப்பது தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று இடங்களை வென்றார் ராமதாஸ். அதன்பிறகு, பா.ஜ.கவோடு கூட்டணி வைத்ததும் ஏறக்குறைய தனித்துப் போட்டியிட்டது போலத்தான். ஒரு இடத்தில் மட்டும்தான் அவரால் வெல்ல முடிந்தது. இந்தமுறை அ.தி.மு.கவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் பா.ம.க நிர்வாகிகள் பலரும், தி.மு.க கூட்டணியைத்தான் விரும்பினார்கள். இதற்கு மாறாக, தனித்துப் போட்டி என ராமதாஸ் எடுத்த முடிவில் பலருக்கும் விருப்பமில்லை. 'கைக்காசைப் போட்டு செலவு செய்வதில் என்ன லாபம் இருக்கப் போகிறது?' என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

இவர்களை வளைப்பதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றி, கட்சியின் முக்கியத் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தினார். அவர் எங்களிடம் பேசும்போது, ' கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதாவால் ராமதாஸ் பல தொல்லைகளுக்கு ஆளானார். திருச்சி சிறையில் உங்கள் அய்யாவை அடைத்தார். ஐம்பது பேர் பயன்படுத்தும் கழிப்பறையைப் பயன்படுத்த வைத்தார்கள். 'அவருக்கு காற்று வசதி வரக் கூடாது' என்பதற்காக சிறையில் இருந்த மரத்தையே வெட்டச் சொன்னார் ஜெயலலிதா. இதனால்தான் இருதய அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு ஆளானார் ராமதாஸ்.

அதேபோல், குருவை பலமுறை சிறையில் அடைத்தார். உங்கள் கட்சியை பல வகையிலும் வஞ்சித்தது அ.தி.மு.கதான். அதுவே, தி.மு.க ஆட்சியில் மத்திய அமைச்சர், இணை அமைச்சர் டி.என்.பி.எஸ்.சி தலைவர், மனித உரிமை ஆணையர், தேர்தல் ஆணையர், தேர்வாணைய உறுப்பினர்கள் என மிகப் பெரிய பதவிகளில் உங்கள் சமுதாயத்தை அமர வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். 1989, 91, 96 என பலமுறை தனித்துப் போட்டியிட்டும் ராமதாஸ் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தமுறை பா.ம.க தனித்துப் போட்டியிடுவதால் ஜெயலலிதாவுக்குத்தான் நன்மை. அ.தி.மு.கவை வீழ்த்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் ஓட்டு தி.மு.க பக்கம் விழுந்தால் மட்டுமே சாத்தியம் என அவர்களிடம் பேச வேண்டும்' எனக் கட்சியின் சீனியர் அறிவுறுத்தினார்.

இதைத்தவிர, தொகுதிக்குள் வலுவாக இருக்கும் பா.ம.க நிர்வாகிகளின் செல்வாக்குக்கு ஏற்ப ஒரு லட்ச ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரையில் செலவு செய்யவும் உத்தரவிட்டார். எங்களின் வாதத்தை பா.ம.கவினரும் உணர்ந்து கொண்டார்கள். தவிர, பா.ம.க தலைமை, இரண்டாம்கட்டத் தலைவர்களின் பேச்சுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எங்களின் இந்த முயற்சியைக் கேள்விப்பட்டதால்தான், தி.மு.கவுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்கிறார் ராமதாஸ். ஆட்சியில் ஜெயலலிதா இருந்தாலும், ஸ்டாலினை விவாதத்திற்கு அழைக்கிறார் அன்புமணி. இவர்கள் எப்படிப் பேசினாலும், அடிமட்ட நிர்வாகிகள் பலர் எங்கள் பக்கம் இருக்கின்றனர். துரைமுருகன், சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என கட்சியின் சீனியர்கள் பலரும், பா.ம.க நிர்வாகிகளை பெருமளவு வளைத்துவிட்டனர். இந்த அதிரடியால் நாற்பது தொகுதிகளில் எங்களுக்கு சாதகமாக களநிலவரம் உள்ளது" என்றார்.

தி.மு.க, அ.தி.மு.க நேரடி மோதல் என்பதுபோய், பல தொகுதிகளில் தி.மு.க, பா.ம.க உள்ளூர் மோதல்கள் மக்களை வதைக்காமல் இருந்தால் சரி...! 
 

-ஆ.விஜயானந்த் 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ