Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பென்னாகரத்தில் அ.தி.மு.கவுக்கு எந்த இடம்? -கலகலத்த கார்டன் சர்வே

அ.தி.மு.கவின் கௌரவப் பிரச்னைகளில் ஒன்றாகவே இருக்கிறது பென்னாகரம் தொகுதி. கடந்த வாரம் அ.தி.மு.க தலைமை எடுத்த ரகசிய சர்வே குறித்து வெளியான தகவல்களால் கலக்கத்தில் இருக்கிறார் அ.தி.மு.க வேட்பாளர் கே.பி.முனுசாமி.

கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின்போது அப்போதைய எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசுவின் மரணத்தைத் தொடர்ந்து,  பென்னாகரத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெற்றார். பா.ம.கவுக்கு இரண்டாவது இடமும் அ.தி.மு.கவுக்கு டெபாசிட் காலியாகும் அளவுக்கு படுதோல்வியும் கிடைத்தது. இந்த வளர்ச்சியை அடுத்துவந்த தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் ராமதாஸ். பென்னாகரம் கொடுத்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து அ.தி.மு.க தலைமை இன்னமும் மீளவில்லை. அதுவும், தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், ' அன்புமணியையும் இன்பசேகரனையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்ய வேண்டும்' என வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க.

தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.கவின் இன்பசேகரன், அ.தி.மு.கவின் கே.பி.முனுசாமி, பா.ம.கவின் அன்புமணி, மக்கள் நலக் கூட்டணியின் நஞ்சப்பன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

' ஆளுங்கட்சியாக இருந்து டெபாசிட் பறிபோனால், அதைவிட கேவலம் வேறு எதுவுமில்லை' என்பதால் தொகுதி மக்களுக்கு தாராளமாக செலவு செய்து வருகிறது அ.தி.மு.க. அதேப்போன்று தி.மு.க,  பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் செலவழிப்பதில் கஞ்சத்தனம் காட்டவில்லை. தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளைவிடவும்,  பென்னாகரம் தொகுதி மக்களை கரன்சி மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். பணம் கொடுக்காத ஒரே வேட்பாளர் சி.பி.ஐ கட்சியின் நஞ்சப்பன் மட்டும்தான்.

இந்நிலையில், கடந்தவாரம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட 65 ஊராட்சிகளில் ரகசிய சர்வே எடுத்தது கார்டன் டீம். கிராமத்திற்கு 20 விண்ணப்பம் என ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் பெயர், முகவரி, தொலைபேசி எண் என பரவலாக சர்வே எடுக்குமாறு கட்சியினர் அறிவுறுத்தப்பட்டனர். இதன்படி எடுத்த சர்வேயில், 'அ.தி.மு.கவுக்கு மூன்றாவது இடம் கிடைக்கலாம்' என தெரியவந்துள்ளது. ' இப்போதைய போட்டியே அன்புமணிக்கும் இன்பசேகரனுக்கும் இடையில்தான்' என அந்த சர்வே நிலவரம் சொல்லியிருக்கிறது. இதையடுத்து, தொகுதிக்குள் பலவீனமான பகுதிகளை அடையாளம் கண்டறிந்து, மக்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர அ.தி.மு.க மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

மீண்டும் 2010 காலகட்டம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா. 'கௌரவ வெற்றியை பெற்றுக் கொடுங்கள்' என வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு கண்டிப்பான உத்தரவையும் பிறப்பித்துள்ளது கார்டன்.

- ஆ.விஜயானந்த்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ