Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாட்சிகளை கலைத்து விடுவீர்கள்...! கெளசல்யா பெற்றோருக்கு ஜாமீன் மறுப்பு

 

சாட்சிகளை கலைத்துவிட வாய்ப்பு இருப்பதாக கூறி, கெளசல்யா பெற்றோரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கர் (22). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கவுசல்யா (19). குமரலிங்கத்தில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தபோது, கெளசல்யாவும், சங்கரும் காதலித்து வந்தனர்.

இது கெளசல்யாவின் பெற்றோருக்கு தெரியவர, இவர்களின் காதலுக்கு கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. எதிர்ப்பையும் மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 13ம் தேதி,  உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்களைக் வாங்கிக் கொண்டு,  பிற்பகல் 3 மணியளவில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், கெளசல்யா மற்றும் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கணவன், மனைவி படுகாயமடைந்து மயங்கி கீழே விழுந்தனர். அந்த பகுதியில் நின்ற சில பொதுமக்கள் தம்பதியினரை காப்பற்ற முயன்றனர். ஆனால், அவர்களையும் அந்த நபர்கள் வெட்ட முயன்றதால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதன்பின் இருவரையும் வெட்டி வீழ்த்திய அந்த மூவரும், சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

உடனே அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சங்கர், கெளசல்யாவை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். அதன்பின்னர் அவர்களை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கெளசல்யா படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து கெளசல்யா தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த ஆணவக்கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, கொலை குற்றவாளிகள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, கௌசல்யாவின் தாய்மாமாவும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கெளசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்திலும், தாயார் அன்னலட்சுமி தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கெளசல்யாவின் பெற்றோர் சின்னசாமி, அன்னலட்சுமி மற்றும் உறவினர் பிரசன்னகுமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close