Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பா.ஜ.கவில் சீட் வாங்கியதே சம்பாதிக்கத்தான்!' -'எஸ்கேப்' ஆகும் பா.ஜ.க வேட்பாளர்கள்

'அடுத்து எந்த வேட்பாளர் என்ன செய்வார்?' என்ற அச்சத்திலேயே நாட்களைக் கழிக்கிறது தமிழக பா.ஜ.க. 'வேட்பாளர் தேர்வில் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்யாததன் விளைவால்தான் இந்த அவஸ்தை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

சட்டமன்றத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு செய்த பா.ஜ.கவின் நீண்டநாள் விசுவாசியான கந்தசாமிக்கு, பென்னாகரம் தொகுதியை ஒதுக்கீடு செய்தார் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தொகுதிக்குள் தீவிரமாக பிரசாரம் செய்து வந்த கந்தசாமி, தேர்தல் அதிகாரியிடம் மனுத் தாக்கலும் செய்தார். 'உங்கள் மீது குற்றவழக்கு இருக்கிறதா? இல்லையா?' என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவறவிட்டதன் விளைவால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு மாற்றாக மனுத்தாக்கல் செய்த டம்மி வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ' அன்புமணியின் தூண்டுதலால்தான் வேண்டுமென்றே வேட்புமனுவில் குளறுபடி செய்தார் கந்தசாமி' என கட்சித் தலைமைக்குப் புகார் பறந்தது. இதையடுத்து, அவரைக் கட்சியில் இருந்தே டிஸ்மிஸ் செய்தார் தமிழிசை.

இந்நிலையில், மடத்துக்குளம் பா.ஜ.க வேட்பாளர் முத்துக்குமார் என்ன செய்கிறார் என்ற தகவலே தெரியாமல் இருந்தது. தஞ்சாவூரில் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில், கட்சிக்காரர்களோடு அவரும் ஐக்கியமானார். 'அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார் முத்துக்குமார்' என்ற தகவலால் கிறுகிறுத்துப் போனது பா.ஜ.க வட்டாரம். இவரையடுத்து, இன்னும் சிலர் பணத்துக்கு விலை போகலாம் என்ற தகவலும் வலம் வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பா.ஜ.க சார்பில் போட்டியிட விருப்பமனு வாங்கியபோது, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தனர். அவர்களில் சரி பாதிப்பேர் புதியவர்கள். 'எப்படியாவது சீட் வாங்கியே தீர வேண்டும்' என்ற நோக்கத்தில்தான் வந்திருக்கிறார்கள். போட்டியிட சீட் கிடைத்ததும், ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ நல்ல விலைக்கு சீட்டை விற்றுவிட வேண்டும் என விரும்பியே வந்தவர்களை, எப்படி முன்கூட்டியே அடையாளம் கண்டுகொள்வது?

மாநிலத் தலைமை அந்த விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டது. தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போவதைவிடவும் கிடைக்கும் தொகைகளைச் சுருட்டிவிடலாம் என கணக்குப் போடுகின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம் பணப் பரிமாற்றத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கும்போது, நாங்கள் வேட்பாளர்களை கண்காணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்" என வேதனைப்பட்டார்.

'அடுத்த விக்கெட் எப்போது விழும்?' என்ற கவலையிலேயே தேர்தல் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள் தமிழக பா.ஜ.கவினர்.

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ