Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அண்ணா நகர் தொகுதியில் முன்னோடியாக ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை! -சென்னை மாநகராட்சி

சென்னை: அண்ணா நகர் தொகுதியில் முன்னோடியாக ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சென்னை மாவட்டத்தில் உள்ள 3,771 வாக்குச்சாவடிகளில் 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''வருகின்ற 16-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே மே 2-ம் தேதி முதல் கட்டமாக சென்னையிலுள்ள 16 தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவை முதல் சுற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக 3,771 வாக்குச்சாவடிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரமோகன் தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் கட்டடத்தில் திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.

இதில், 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டுக் கருவிகள், 256 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவிகள், சென்னை அண்ணா நகர் தொகுதியில் முன்னோடியாக பயன்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் சின்னம் பொறித்த ஒட்டு வில்லைகள் ஒட்டும் பணி விரைவில் நடைபெறும். தேர்தல் தினத்துக்கு முதல் நாள், வாக்குப் பதிவுக்குத் தேவையான அனைத்து தளவாட பொருள்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ