Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலில் ஜெயிக்கும் கட்சி இதைச் செய்யாமல் இருக்கலாமே!

கேரளா மாநிலம் கொல்லத்தில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற புட்டிங்கள் தேவி கோவிலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபெற்ற அந்த விழாவில் திடீர் என்று பெருத்த சத்தத்துடன் வெடி வெடித்தன. இவ்வெடி விபத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட மக்கள் கருகி எரிந்து இறந்து போனார்கள். 400க்கும் மேற்பட்ட மக்கள்கள் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் பாதிப்பு ஒரு கிலோமிட்டர் அப்பால் உள்ள மக்களுக்கு ஏற்பட்டது.

வெடி வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழக்கம் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது. அதுவும் கேரளாவில் இது தவிர்க்க முடியாத வழக்கமான ஒன்று திருமணம்,விளையாடு போட்டிகளில், மத விழா,பொதுக்கூட்டம் மற்றும் பல நிகழ்வுகளில் வெடி வெடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரளாவில் வெடியின் முக்கியத்துவத்தை புரிந்த வெடிமருந்து முகவர்கள் போட்டி போட்டு திருமண  வீட்டாரிடம் பேரம் பேசுவார்கள். திருமணத்தில் யார் பிரம்மாண்டமான வெடி வெடிக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்ற கடுமையான போட்டிகளையும் வைப்பார்கள். இந்து, கிருத்துவ சமூகத்தை சேர்ந்தவர்களுக் தங்களுடைய மத விழாக்களில் வெடி வெடிப்பதை கட்டாயமாக்கி கொண்டுள்ளனர்.
இப்படி இவர்களுடைய மகிழ்ச்சியையும், கவுரவத்தையும் வெளிபடுத்தும் வெடிகள் பார்ப்பதற்கு கண்களுக்கு விருந்தாக இருந்தபோதிலும் அது உற்பத்தி முதல் இறுதி வரை பல மனித உயிர்களை பறித்து உள்ளது.

பெட்ரோலிய மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின் படி வெடிகளை தயாரிக்கும் போது வருடத்திற்கு 25 கூலி தொழிலாளிகள் இறக்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிவகாசி மாவட்டத்தில் மட்டும் 90% கூலி தொழிலாளிகள் வெடிகளை தயாரிக்கும்போது ஏற்படும் விபத்தில் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வெடிமருந்தை தவறாக கையாளும் ,போதிய அனுபவம் இல்லாத கூலித்தொழிலாளர்கள்,பாதுகாப்பு முறைகள் பற்றாக்குறைகள் மற்றும் குழந்தை தொழிலாளிகளை பணியமர்த்துவது போன்ற காரணிகள் ஆகும். இதற்கு அரசு நிறுவனங்களும் சரியான திட்டங்களை கொண்டு தடுப்பதில்லை.

ஒவ்வொரு வருடம் தீபாவளி பண்டிகையன்று நாடு முழுவதும் இந்து சமுதாய மக்களும் மற்றும் இன்னபிற சமுதாயத்தின் மக்களும் வெடிகளை வெடித்து தங்களுடைய பண்டிகையை கொண்டாடுவர். பொதுஇடங்களில் நடக்கும் வாணவேடிக்கை மக்களின் கண்களுக்கு அழகான காட்சிகளை தருகிறது. ஆனால் இது சுற்றுசூழலுக்கு பெரும் கேட்டை விளைவிக்கிறது.

வெடித்த வெடிகளில் இருந்து வெளிவரும் புகை காற்றை மாசுபடுத்துவத்தோடு மனிதர்கள் சுவாசிக்கும் உயிர் மூச்சு காற்றையும் நஞ்சாக்குகிறது. சாதாரண நாட்களில் மாசுபடும் காற்று தீபாவளி தின கொண்டாட்டத்தினால் மட்டும் பத்து மடங்கு அதிகமாக மாசுபடுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது டெல்லி,சென்னை மற்றும் பெங்களூருதான்.

இதனை உணர்ந்த உச்சநீதிமன்றம் கடந்த பத்து ஆண்டுகளாக தீபாவளியன்று  வெடிகளை  பயன்படுத்த தடை விதிக்க முயற்சித்து வருகிறது.நாட்டு மக்களின் பாரம்பரியம்,கலாச்சாரம் மற்றும் மக்களின் உணர்வுகளை மதிப்பதால் இதனை தடை விதிக்காமல் உள்ளது.

வெடிகளை முன்னெச்சரிக்கையாக கையாலும் முறைகளை நீதிமன்றம் வெளியிட்டாலும் மக்கள் அதனை பொருட்படுத்துவதில்லை. வெடிகள் வானவேடிக்கையின்போது பிரகாசமாகவும் சப்தமாகவும் இருக்க அதில் சக்திவாய்ந்த சில வெடிபொருட்களை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதுண்டு. அரசு சீனாவில் இருந்து வரும் குறைந்த விலை வெடிபொருட்களை கொண்டு வெடிகளை தயாரிக்கவும் விற்கவும் தடை விதித்துள்ளது. காரணம் பொட்டாசியம் குளோரைட் என்ற வேதியல் பொருள் சீன வெடிகளில் அதிகமாக கலந்திருக்கும் காரணத்தால் அதனை இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இதனை வெடி தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்டுகொள்வதில்லை.  இலாப நோக்கத்தை கொண்ட முதலாளிகள் பலிகடாவாக்குவது அப்பாவி ஏழை கூலி தொழிலாளிகளைத்தான்.
வெடிமருந்துகளை அளவுக்கு மீறி அடைப்பது,தவறான முறையில் கையாளும்போது, பாதுகாக்கும்போது உள்ள சுற்றுசூழலின் வெப்பம், ஈரப்பதம் சரியான அளவில் இருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் அது பெரும் நாசத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் சிவகாசியும் கேரளாவில் பாலக்காடும் வெடி விபத்துகளை அதிகமாக எதிர்கொள்ளும் இடங்களாகும். அரசு என்னதான் கூர்மையாக கவனித்தாலும் போலிகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடந்த வெடி விபத்தில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தனர். இறைவனை வணங்க வரும் பக்தர்கள் வேடிக்கை, கேளிக்கை நிகழ்ச்சியால் இறப்பது தவறான செயல் என்று எண்ணி கோவில் நிர்வாகம் வெடி வெடிப்பதை கோவிலில் தடை செய்தது. இதேபோல் நாட்டில் உள்ள அனைத்து கோவில்,தேவாலயம் மற்றும் தர்கா விழாவில் நடைபெறும் வான வேடிக்கைகளை நிறுத்தி சுற்றுச்சூழல் மற்றும் மனித உயிர்களை பாதுகாக்கலாம். சுற்றுச்சூழலை பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதன் மற்றும் அரசின் கடமையாகும்.

அதன் முதற்கட்டமாக வரும் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப்போகும் கட்சி ஒரு விஷயத்தை  ஆரம்ப புள்ளியாக துவக்கவேண்டும். தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தொண்டர்கள் தமிழத்தின் அத்தனை மூலை முடுக்கெல்லாம் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவது காலம்காலமாக நடைபெறும் வழக்கம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மனித உயிர்களை பாதுகாக்கும்படியும் இந்த நிகழ்வை வெற்றி பெற்ற கட்சியினர் இந்த முறை நிறுத்திக்கொள்வதே தேர்ந்தெடுக்கப்போகும் அரசின் முதல் நல்ல காரியமாக இருக்கும்.

செய்வார்களா அவர்கள் செய்வார்களா...?

- யூசுப்தீன், ஆருர்

எடிட்டர் சாய்ஸ்