Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பீகாரில் நடந்ததுதான், இங்கும் நடக்கும்!' -கணிக்கும் மக்கள் நலக் கூட்டணி

'அ.தி.மு.க ஆட்சி தொடரும்', 'தி.மு.க ஆட்சி அமைக்கும்' என நாள்தோறும் வெளியாகும் கருத்துக் கணிப்புகளால் கொதிப்பில் ஆழ்ந்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. 'பீகாரைப் போலவே கணிப்புகள் அத்தனையும் தவிடு பொடியாகும்' எனக் கொந்தளிக்கிறார் சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன்.

மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

" தி.மு.கவும் அ.தி.மு.கவும் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்கின்றன. இதுபற்றி வரும் புகார்களின் பேரில் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பணப்பட்டுவாடாவை அவர்களால் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் மக்கள் மத்தியில் நகைப்பை உருவாக்கிவிட்டது. ஒரு நாளேடு அ.தி.மு.க ஜெயிக்கும் எனச் சொல்கிறது.

இன்னொரு நாளேடும் தொலைக்காட்சியும் தி.மு.க வெற்றி பெறும் என்கிறது. அப்படியானால், இந்தக் கருத்துக் கணிப்புகள் அத்தனையும் பொய் என்பதுதானே உண்மை. இன்றைக்கு இருக்கும் நிலையில், யாருக்கு ஓட்டுப் போடுவோம் என்றெல்லாம் மக்கள் சொல்ல மாட்டார்கள். உண்மையில் களநிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது. மாற்றம் வேண்டும் என்று விரும்புகிற வாக்காளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, இதுபோன்ற பொய்யான கருத்துக் கணிப்புகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு ஆட்சியிலும் கல்விக் கொள்ளை உச்சக்கட்டமாக இருந்துள்ளது. மாணவர்கள் நலனில் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆதிதிராவிடப் பள்ளிகளில் 90 ஆயிரம் மாணவர்கள் அளவுக்கு சேர்க்கை குறைந்துள்ளது. இதற்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான உதவித் தொகைகளில் நடக்கும் முறைகேடுகள்தான். ஆதி திராவிட மாணவர்களுக்குச் சேர வேண்டிய நலத்திட்டங்களில் பெருமளவு கொள்ளை நடந்திருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆண்டு தொடக்கம், டிசம்பர், மார்ச் என மூன்று வகையாகப் பிரித்து நலத்திட்ட நிதியை அனுப்ப வேண்டும். அதில், எந்த மாவட்டம் 15 சதவீத கமிஷனை முன்கூட்டியே கொடுக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு கொதிகலன் வாங்கியதில் ஏகத்துக்குள் ஊழல் நடந்திருக்கிறது. இந்தக் கொள்ளையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. அனைத்து துறைகளையும் லஞ்ச ஊழலால் சீரழித்துவிட்டார்கள்.

இவர்களின் ஊழல்களையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது. கருத்துக் கணிப்புகளால் அவர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. பீகாரில் வெளியான கருத்துக்கணிப்புகள் எப்படித் தவிடுபொடியானதோ, அதேபோல், தமிழ்நாட்டிலும் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். தி.மு.கவும் அ.தி.மு.கவும் தோல்வியைத் தழுவும்" என்றார் கொந்தளிப்போடு.
 
-ஆ.விஜயானந்த்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ