Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செக்போஸ்ட்டுகளுக்கு ஆணையம் வைத்த செக்! -பணக்கடத்தல் முற்றுப்பெறுமா?

ட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். 'காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவால் கரன்சிகளுக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை' என மகிழ்ச்சியடைகின்றன சில கட்சிகள்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆணையம் மேற்கொண்ட பண பறிமுதல் நடவடிக்கையின் எண்ணிக்கை விரைவில் செஞ்ரியைத் தொட இருக்கிறது.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரியிலும் மே 16-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேர்தல் நடக்காததால், பணப் பரிமாற்றத்திற்கான முக்கிய கேந்திரமாக இந்த மாநிலங்கள் இருந்து வந்தன. கர்நாடகாவில் தேர்தலுக்கு முன்பே பணத்தை பதுக்கிவைத்து விநியோகம் நடப்பதாக, அரசியல் கட்சிகள் புகார் கூறிவந்தன. இந்தப் புகாரை ஆணையம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " தமிழ்நாட்டில் பறக்கும் படை சோதனை, வருமானவரித்துறை சோதனை எனப் பலகட்டங்களில் சோதனை நடத்தினாலும், பிடிபடும் தொகைகள் மிகச் சிறிய அளவிலேயே உள்ளன. இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரிந்துதான், கர்நாடகா, ஆந்திராவில் பெரும் பணத்தை சில கட்சிகள் பதுக்கி வைத்திருந்தன. அங்குள்ள வங்கிகளும் கண்காணிப்பு வளையத்தில் வரவில்லை. ஓசூர் வழியாக பணக்கடத்தல் வெகு எளிதாக நடந்து வந்தது. கொங்கு மண்டலத்தில் பிடிபட்ட தொகைகள் பெரும்பாலும், எல்லைப் பகுதிகளில் இருந்து கடத்தி எடுத்து வரப்பட்டவைதான். கடந்த சில வாரங்களாக கர்நாடக வங்கிகளில் அதிகளவில் பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதுதவிர, சுமார் இரண்டாயிரம் கோடி அளவுக்குப் பணம் கடத்தப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஆணையத்தின் கவனத்திற்குப் புகார் எடுத்துச் சென்றாலும், கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் நெருக்கத்தில் மாநில எல்லைகளைக் கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வேலையை இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்திருந்தால் பெருமளவு பணப் பரிமாற்றத்தைத் தடுத்திருக்க முடியும். இதுபற்றி, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் புகார் கூறியிருந்தோம். இப்போது ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரள எல்லையொட்டிய தமிழகப் பகுதிகளை சீல் வைக்க உத்தரவிட்டிருக்கிறார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறியிருக்கிறார். காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு இது" என ஆதங்கப்பட்டார்.

ஆனால், தேர்தல் ஆணைய அதிகாரிகளோ, " பணப் பரிமாற்றம், மதுபானம் கடத்தல் உள்ளிட்டவைகளைக் கண்காணிக்க செக் போஸ்ட்டுகளில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. தினமும் மூன்று ஷிப்ட் அடிப்படையில் பறக்கும்படையினர் செயல்படுவார்கள். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். பணப் பரிமாற்றத்தை கூடுமான வரையில் தடுத்து வருகிறோம். எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் ரகசிய தகவலால்தான் ஏராளமான பணம் பிடிபடுகிறது. தேர்தல் நெருக்கத்தில் எங்கள் பணி இன்னும் தீவிரமடையும்" என்கின்றனர்.

'ஆணையத்தின் செயல்பாடு இன்னும் தீவிரமடைய வேண்டும்' என வேண்டுகோள் வைக்கின்றனர் அரசியல் கட்சி பிரமுகர்கள்.

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்