Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆணையத்தின் ஆதரவு யார் பக்கம்?' -கொந்தளிக்கும் மிஸ்டர் பப்ளிக்!

" வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய தேர்தல் ஆணையம், மௌனமாக இருக்கிறது. நாங்கள் கொடுத்த புகாரின் பேரிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கொந்தளிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

அதில் " ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என ஆணையம் பிரசாரம் செய்கிறது. ஆனால், சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பதும் குற்றம்தான். இதைத் தடுக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது ஆணையத்தின் கடமை" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

கூடவே, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பவர்கள் குறித்த தகவலையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து, புகார் மனுவோடு இணைத்திருந்தனர்.

ஆனால் "இந்த நிமிடம் வரையில் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் குமுறுகின்றனர் அவர்கள்.

இது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்கிறது. இந்த விளம்பரத்திற்கான செலவு முழுக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் செல்கிறது. காசு கொடுத்து ஓட்டு வாங்குவது மட்டும் குற்றமல்ல. சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஓட்டுக் கேட்பதும் கொடிய குற்றம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123(3)(3ஏ) படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஊழல் பிரிவுகளுக்குள்தான் இதுவும் வருகிறது. பல தொகுதிகளில் தலித் மக்களை, பிற சமூகத்து மக்களிடம் இருந்து பிரிக்கும் வேலைகள் நடந்து வருகிறது.

'இந்த சாதிக்காரருக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும்' என தலித் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். ' அப்படி ஓட்டுப் போடாவிட்டால் உயிரோடு உலவ முடியுமா?' என மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், பிரசாரம் செய்ய வேண்டிய கடமை ஆணையத்திற்கு இருக்கிறது. சமூக வலைதளங்களில் சிலர் சாதியைச் சொல்லியே பிரசாரம் செய்கிறார்கள். இவர்கள் மீது ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் கொடுத்த புகாரையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், சாதி, மதத்திற்கு எதிராக எந்தப் பிரசாரத்தையும் செய்ய மறுப்பதன் காரணமும் புரியவில்லை" என்றார் வேதனையோடு.

தேர்தல் நாளை கவலையோடு கவனித்து வருகிறார்கள் கல்வியாளர்கள். இவர்களின் கோரிக்கைக்கு ஆணையம் செவிசாய்க்குமா?

-ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ