Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடல்நலக்குறைவு; விடைபெற்றன காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய யானைகள்

காஞ்சிபுரம்; உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் யானைகள் சிகிச்சைக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கிவந்தவை சந்தியா என்ற காமாட்சி , அப்பு என்ற இந்துமதி மற்றும்  ஜெயந்தி ஆகிய யானைகள். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த 3 யானைகளும் கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டன. விஷயம் தெரியவந்தபின் கோவில் நிர்வாகம் 3 யானைகளுக்கும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் இதில் யானைகளுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேசமயம் நோய் முற்றி யானைகளின் உடலில் பெரும் புண்கள் உருவாகி அவஸ்தைக்குள்ளாகின. இந்த நிலையிலேயே யானைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிவந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயந்தியை தவிர மற்ற இரண்டு யானைகளும் நடமாடும் சக்தியற்றுபோய் கடும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து கோயில் நிர்வாகம் 3 யானைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்க முடிவுசெய்து அதற்காக மரக்காணத்தில் உள்ள விலங்குகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றின் வசம் யானைகளை ஒப்படைக்க முடிவெடுத்தது. அதன்படி இன்று அதிகாலை 3 யானைகளும் மரக்காணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

யானைகளை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது அவைகள் இதன்பின் காஞ்சிபுரம் வருவோமா என்பதுபோல வாகனத்தில் ஏற அடம்பிடித்ததோடு 3 யானைகளும் சோகமாக கண்களில் கண்ணீரை சொரிந்தபடியே சுற்றிசுற்றிவந்தன அந்த இடத்தை.

சங்கர மடத்திற்கு சொந்தமான இந்த யானைகள் பக்தர்களுக்கு மிகவும் பிரியமான யானைகள். இந்திய அளவிலான அத்தனை பிரபலங்களும் இந்த யானைகளிடம் ஆசி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் இந்த யானைகளை பராமரித்துவந்த பாகன் உடல்நலக்குறைவால் இறந்தார்.

மரக்காணத்தில் இந்த யானைகளுக்கு 3 வருடங்கள் தொடர் சிகிச்சை அளித்து சிகிச்சைக்குப்பின் முதுமை காரணமாக ஜெயந்தி தவிர மற்ற இரு யானைகளும் வேடல் அருகே சங்கர மடத்திற்கு சொந்தமான இடத்தில் பராமரிக்கப்படும்  என்றும் குணமடைந்ததும் குட்டி யானை ஜெயந்தி மீண்டும் கோயிலுக்கு பக்தர்களுக்கு ஆசிவழங்க அழைத்துவரப்படும் என்றும் கோயிலின் ஸ்ரீகாரீயம் விஸ்வநாத சாஸ்திரிகள் தெரிவித்தார்.

காமாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசிக்கும் முன் கண்டு ஆசி பெறுவது இந்த யானைகளைத்தான். 40 வருடங்களாக காஞ்சியின் ஆன்மிக அடையாளமாக இருந்த யானைகள் காஞ்சியைவிட்டு சென்றது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close