Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நோட்டா' வுக்கு ஓங்கிக் குத்து..!' - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு மல்லுக்கட்டு!

தேர்தல் களம் பரபரத்துக்கிடக்கும் நிலையில், 'எங்கள் வாக்கு எந்த அரசியல் கட்சிகளுக்கும் கிடையாது. 49 ஓ தான் இந்த முறை எங்கள் சாய்ஸ் ' என பகீர் கிளப்பியுள்ளது தமிழக வீரவிளையாட்டு மீட்புக் கழகம்.

தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு,சேவல்சண்டை, ரேக்ளாரேஸ், மஞ்சுவிரட்டு தொடர்பான தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்த அமைப்பு,  கடந்த வாரம் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து பரபரப்பு கிளப்பியது.

இந்த அமைப்பின் தலைவர் ராஜேஷை திருச்சியில் சந்தித்தோம்.

தமிழக பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை வழங்கியதே '49 ஓ' முடிவுக்கு காரணம் என கொந்தளித்தார் மனிதர்.

“கடந்த 2014,  மே மாதம் முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இதுதொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசு,   தொடர்ந்து இந்த வழக்கை அழுத்தம் கொடுத்து நடத்தவில்லை. தடையை எதிர்த்து எங்களது தோழமை அமைப்புகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை, துரதிருஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி பண்ணிடுச்சு. ஆனால், தமிழக அரசு மனு மீது இன்னும் விசாரணையையே தொடங்கவில்லை. காரணம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு சரியாக அழுத்தம் தராததே.

தடையை மீறி தமிழகத்தில் சில மாவட்டங்களில், இந்த கலாச்சார விளையாட்டுகள் நடைபெற்றதே?


கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறாத  ஏமாற்றத்துல, விரக்தியில மக்கள் ஒரு சில இடங்கள்ல நடத்தினாங்க. காவிரி நதி நீர்ப்பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் கேரள அரசும் ,கர்நாடக அரசும் மதிக்கலையே. அதை அந்தந்த மாநில மக்களுக்குச் சாதகமாகத்தானே பயன்படுத்திக்கிட்டாங்க. ஆனால், நாங்க அதை சரியாகவே மதிக்கிறோம். இன்னும் முடிந்தளவுக்கு சரியா கண்காணிச்சு, சட்டத்தை மீறக்கூடாதுனு கட்டுப்பாடாகத்தான் இருக்கோம்.

49 ஓ சட்டப்படியான உரிமை என்றாலும் ஜனநாயக முறைப்படி அரசியல்கட்சிகளை புறக்கணிப்பதாகாதா?


தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ்,சேவல் சண்டை போன்ற கலாசார நிகழ்வுகளுக்காக கோயில் திருவிழாக்கள்  நடைபெற்றுவந்தன. 2006-க்கு முன்னர் 1500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆனால், 2006 -க்குப் பின்னர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக குறைக்கப்பட்டது.
கடைசியாக , 2014 -ம் ஆண்டு வெறும் 22 ஊர்களில்  மட்டும்தான் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கலாசாரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்துதான் ஜல்லிக்கட்டு நடைபெற்ற 1500 கிராம இளைஞர்கள், தமிழக வீரவிளையாட்டுகளுக்காக போராடும் இளைஞர்கள் '49 ஓ'விற்கு ஓட்டுப்போட முடிவெடுத்துள்ளனர். 

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் ஜல்லிக்கட்டு நடத்துறதுல பிரச்னை தொடர்ந்து  இருந்திருக்கு. இனிமேலும் நாங்க ஏமாறத் தயாரில்லை.

விலங்குகள் நல வாரியத்தையும், பீட்டா (PETA) போன்ற அமைப்புகளையும்  மத்திய அரசு தகுந்த எச்சரிக்கை செய்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு பிரச்னையே வந்திருக்காது. இதில் மத்திய அரசின் செயல்பாடுகள் பெரிய அளவில் அதிருப்தி அளிக்குது. 2016 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் பா.ஜனதா, திடீர்னு 'தடை நீக்கம்னு' சொல்லி ஏமாத்துச்சு. தமிழகத்தில்  தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கணும்னு நினைச்சிருந்தால், தடை விதிச்சதுக்கு பிறகு தமிழக வீரவிளையாட்டுகளுக்கு தடை நீக்க ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை.

இதனால் எங்கள் அமைப்பு , இந்தத் தேர்தலை புறக்கணித்து ஜனநாயக முறையில் 'நோட்டோவுக்கு' வாக்கு அளிக்கவுள்ளோம். குறைந்தது 1,50,000 வாக்குகள் நோட்டோவுக்கு உறுதியாக விழும் என்று நம்புகிறோம். இந்த முடிவுக்கு இளம் வாக்காளர்களும் ஆதரவு அளிப்பாங்கனு நம்புகிறோம்.

உங்களது அரசியல் இருக்கட்டும், ஜல்லிக்கட்டுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன?

ஜல்லிக்கட்டுக்குப் பயன்படும் மாடுகள்தான், நம் நாட்டில் இனவிருத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டினை தடைசெய்வதின் மூலம், நாட்டு மாடுகளின் பயன்பாடு மறைமுகமாக குறைக்கப்படுகிறது. இதனால் அம்மாடுகளை பராமரிக்க ஆகும் செலவு அதிகரிக்கிறது. இதனால் கஷ்டப்படுற நிறைய விவசாயிகள் அதை வித்துடுறாங்க. வியாபாரிகள், அந்த மாடுகளை இறைச்சிக்கு அனுப்புறாங்க.

இதனால் நம் நாட்டு பசுக்களின் இனவிருத்தி கேள்விக்குறியாகும். ஆகையால் பால் வளம் குறையும். பால் வளம் குறைந்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி மாட்டினை நம் நாட்டிற்கு நாம்  இறக்குமதி செய்வோம். இதனால், கூடுதலான பால் கிடைக்கும் என்று சொல்லி, சத்து இல்லாத பால் தரும் வெளிநாட்டுப்பசுவான ஜெர்சி மாட்டினை வாங்கி ஏமாறுவோம். அதுமட்டுமின்றி, ஜெர்சி பசுவின் பாலினைக் குடித்தால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் என்கிறது ஆய்வுகள்.

நீரிழிவு நோய் அதிகரித்தால், நாம் மருந்துகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாடுகள் நம் நாட்டில் கடைவிரிப்பார்கள். இதனால்தான், ஜல்லிக்கட்டுக்கு தடைபெற சில முக்கியப்புள்ளிகள் முயற்சிக்கிறார்கள்" என்றார் அதிர்ச்சியாக.

ஜல்லிக்கட்டுக்காக அரசியல்கட்சிகளுடன் மல்லுக்கட்டும் தமிழக வீரவிளையாட்டு மீட்புக் கழகம் சாதிக்குமா?

- ம.மாரிமுத்து
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்