Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நல்ல மனிதர்தான், படித்தவர்தான்...ஆனால்?' -ம.ம.கவுக்கு இப்படியும் ஒரு சோதனை

மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு தேர்தல் களத்தில் நடக்கும் அடுத்தடுத்த சோதனைகளால் அதிர்ந்து போயிருக்கிறது தி.மு.க.

'மக்களிள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை' எனத் தெறித்து ஓடுகிறார்கள் உடன்பிறப்புகள்.

சட்டமன்றத் தேர்தலில் கப் - சாசர் சின்னத்தில் போட்டியிடுகிறது மனிதநேய மக்கள் கட்சி. கடந்தமுறை அ.தி.மு.க அணியில் நின்று வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா, இந்தமுறை தி.மு.க அணியில் போட்டியிடுகிறார். கடந்த ஐந்தாண்டுகளில் ராமநாதபுரத்திற்கு பெரிதாக அவர் எதுவும் செய்யவில்லை என்ற கோபம் தொகுதி முழுக்க நிரம்பி இருக்கிறது. எதிரணியில் போட்டியிடும் அ.தி.மு.க மணிகண்டனுக்கும், தே.மு.தி.கவின் சிங்கை ஜின்னாவுக்கும் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றாலும், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது ம.ம.க.

இதுபற்றி நம்மிடம் பேசிய ராமநாதபுரம் தி.மு.க நிர்வாகி ஒருவர், " கடந்தமுறை வெற்றி பெற்ற பிறகு, நன்றி சொல்லக்கூட ஜவாஹிருல்லா வரவில்லை என மக்கள் கோபப்படுகிறார்கள். நகரின் போக்குவரத்து நெருக்கடி, அடிப்படை வசதியின்மை, சரியான சாலைகள் இல்லாதது போன்ற பிரச்னைகளை அவர் தீர்க்கவில்லை என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

நாங்கள்தான் அவர்களை சமாதானம் செய்து வைக்கிறோம். அவரும், 'சட்டமன்றத்தில் உங்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தேன். மருத்துவமனைக்கு புதிய கட்டடம், ஐந்து நிழல் குடைகள் அமைக்க கோரிக்கை வைத்தேன். என் பெயரைப் போட்டு கல்வெட்டு திறப்பதை ஆளுங்கட்சி விரும்பவில்லை. மக்களுக்காக நான் வைத்த எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை. எவ்வளவுதான் போராட முடியும்? இந்தமுறை அப்படி இருக்காது' என சமாதானம் செய்கிறார்.

இதைவிடக் கொடுமை, காலை ஆறு மணி முதல் 12 மணி வரையும், மதியம் 4 மணி முதல் பத்து மணி வரையும் வேட்பாளருக்காக பிரசாரம் செய்கிறோம். பிரசாரத்திற்கு வருகிற கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு டீ கூட வாங்கித் தருவதில்லை. இதனால் பல தொண்டர்கள் பிரசாரத்திற்கு வருவதையே விரும்பவில்லை. ஆதரவு கேட்கச் செல்லும் இடங்களில் வெறும் சுடுதண்ணீர் மட்டுமே வாங்கிக் குடிக்கிறார் ஜவாஹிருல்லா. ஓர் அளவுக்காவது செலவு செய்தால்தானே, கட்சிக்காரர்கள் வருவார்கள் என்று ம.ம.க நிர்வாகிகளிடம் சொல்லிப் பார்த்துவிட்டோம். எதுவும் எடுபடவில்லை.

தி.மு.கவின் தீர்மானக்குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம்தான் தொகுதிப் பொறுப்பாளர். அவரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'கையில் பணமில்லை' என்கிறார்கள் ம.ம.க நிர்வாகிகள். ஆனால், மாவட்ட நிர்வாகிகளோ, 'கூட்டணிக் கட்சிகளுக்கும் நாம்தான் செலவு செய்கிறோம். ஒன்றரை கோடி ரூபாய் வரையில் கட்சி கொடுத்துள்ளது' என்கிறார்கள். யார் சொல்வது உண்மை? என்று தெரியவில்லை. பேராசிரியர் ஜவாஹிருல்லா படித்தவர்தான், பண்பானவர்தான். அதற்காக கூட்டணிக் கட்சித் தொண்டர்களை வதைப்பது நியாயமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

ராமநாதபுரம் கடல் காற்றின் வெப்பத்தின் முன்பு கூட்டணிக் கட்சிகளின் குரல்கள், கானல்நீராகவே மாறிப் போய்விடுமா?

-ஆ.விஜயானந்த் 

 

எடிட்டர் சாய்ஸ்