Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசிட்டிங் கார்டு ஓட்டு வேட்டை! - 'ஐடியா மணி' அரசியல்வாதிகள்

திரைப்படம் ஒன்றில் தலைமறைவு வாழ்க்கை வாழும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்,  நாகேஷ் மூலம் இட்லியில் தங்கக் காசுகளை ஒளித்து மக்களுக்கு கொடுக்கச் செய்வார். நாற்பதாண்டுகளுக்கு முன்னர் வந்த சினிமாக்கதையை துாசி தட்டிதான், கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு லட்டுக்குள் மூக்குத்தியை, கம்மலை வைத்து கொடுத்து ஓட்டுப்பெற்றனர் நம்மூர்  அரசியல்வாதிகள்.

'இனாம்' என்ற பெயரில் வேட்டி, சேலைகள் வழங்குவது மட்டுமே அதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. பின்னர், அரிசி, பருப்பு  என்று அத்தியாவசிய பொருட்களை கொடுப்பதாக மாறியது. இப்போது அதிலும் கொஞ்சம் நுாதனம் வந்துவிட்டது.  அதுதான் 'விசிட்டிங் கார்டு ஓட்டுவேட்டை'.

விசிட்டிங் கார்டை எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொண்டுபோய் கொடுத்தால் அந்த விசிட்டிங் கார்டுக்கும் வாழ்க்கை, அதைக் கொண்டுபோய் சேர்த்தவருக்கும் கொஞ்சம் வருமானம்.  பொதுவாக எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதை தொடங்கி வைப்பது தலைநகராகத்தான் இதுவரை இருந்து வந்தது. முதன்முறையாக, கரூர் மாவட்டத்தில் ஆரம்பித்து திராவிட இயக்கம் வேரூன்றிய ராயபுரம் தொகுதியில் வந்து நிற்கிறது.

ஆம்...விசிட்டிங் கார்டு மூலம் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது தமிழக தேர்தல் அரசியல். இதுபற்றி கரூர் மாவட்ட உடன்பிறப்பு ஒருவரிடம் பேசினோம். "இரண்டு நாளாவே அண்ணன் ரொம்ப குழப்பத்துலதான் இருந்தாரு. ஜெயிச்சே ஆகணும்கற கட்டாயம். பல வழிகள்ல யோசிச்சி  கண்டுபிடிச்ச வழிதான் விசிட்டிங் கார்டு பிளான்.

பணத்தை எப்படி ரகசியமா ஓப்பன் பண்ணாலும் அதைவிட ரகசியமா மேட்டர் வெளியே கசிந்து விடுகிறது. இதனால அண்ணன் கண்டுபிடிச்ச மேட்டர்தான் விசிட்டிங் கார்டு மேட்டர்” என்றார்.

அதாவது அண்ணனின் 'விழுதுகள்' வாக்காளர்களை தேடிப்போவது, அல்லது தேடி வர்றவங்களுக்கு விசிட்டிங் கார்டை கையில கொடுப்பது இதுதான் திட்டம். அதைக் கொண்டு போய் ஏற்கனவே பேசிவைத்துள்ள சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு கடைகளில் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கு வேண்டிய சரக்குகளை வாங்கிக் கொள்ளலாம். பொருட்கள் தேவையில்லை என்றால், ரொக்கப் பணமாகவே வாங்கிக் கொள்ளும் ஆஃபர் வசதியும் உண்டு. 

ஆளுக்கு 50 கார்டுகள் என 'விழுதுகள்' வாக்காளர்களுக்கு கார்டு கொடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனராம். பறக்கும் படை, தேர்தல் ஆணையம் இப்படி எந்த சிக்கலும் இதில் வராததால் வேட்பாளர்கள் கனக் கச்சிதமாக வாக்கு 'சேகரித்து' வருகின்றனர் தொகுதிகளில். 
 விசிட்டிங் கார்டு மூலம் நடந்து வரும் வாக்கு சேகரிப்பை,  கரூரில் இருந்து நொடியில் கேட்ச் செய்து கொண்டுள்ளது சென்னையின் ராயபுரம் தொகுதி என்ற தகவல் வர, அது குறித்து பரபரப்பு வேட்பாளர் ஒருவரின் தொகுதியில் விசாரித்தோம்.   
 
"அண்ணன் கொடுக்கச் சொன்னார் என்று பொது மக்களிடம் விசிட்டிங் கார்டைக் கையில் கொடுத்து, அதை எப்படி, எந்தெந்த கடைகளில் பணமாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் விளக்கமாக சொல்லிக்  கொடுப்பதற்கான குழுவை தொகுதியில் பல இடங்களில் போட்டுள்ளோம். அவர்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்கிறார்கள் "என்றனர்.

'அது சரி, வழக்கமாக தலைநகரில்தான் 'ஐடியா' மணிக்கள் இப்படி பல நுாதன முறைகளை உலகிற்கு சொல்லித்தருவார்கள். அப்படியிருக்க கரூரில் இருந்து ஐடியாவை இறக்குமதி செய்திருக்கிறீர்களே...?,' என்றோம்.

"இதுவும் எங்க ஐடியாதாங்க... போன தேர்தலில் துணிக்கடைகளில் நாங்கள் கொடுக்கும்  கூப்பனை   காட்டி குறிப்பிட்ட நான்கு ஜவுளிக் கடைகளில்  ஆயிரம் ரூபாய் வரை துணிகளை வாங்கிக் கொள்ளலாம். அது மிக்கி மவுஸ் பொம்மைக்கான விளையாட்டு கூப்பன் போல இருக்கும். அதில் எந்த விஷயத்தையும் போட்டிருக்கமாட்டோம்.

இதுகுறித்து  விசாரித்து யார் வந்து மடக்கினாலும், பிடித்தாலும் பிரச்னையே வராது. தேர்தல் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து இதை செய்தோம். அதை அப்படியே கரூரில் காப்பியடித்து கடைகளில் விசிட்டிங் கார்டு கொடுப்பதாக கதையை மாற்றிப் போட்டனர். ஆனாலும் ஓபனிங் பேட்ஸ்மேன் நாங்கதானே" என மார்தட்டுகின்றனர்.

மக்களுக்கு நல்லது செய்யவா, நீங்க இவ்வளவு கஷ்டப்படுறீங்க?

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ