Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக சிறைத்துறையின் 'ஃபிரீடம் ஊழல்'! -அங்காடிகளுக்கு சீல் வைத்த அவலம் #VikatanExclusive

தமிழக சிறைகளில் கைதிகளின் உழைப்பில் நடத்தப்பட்டு வந்த ஃப்ரீடம் கடைகளுக்கு சீல் வைத்துவிட்டனர் அதிகாரிகள். ' கைதிகளின் உழைப்பில் கிடைத்த லாபத்தை மொத்தமாகக் கொள்ளையடித்ததுதான் இதற்குக் காரணம்' என்கின்றனர் சிறைத் துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் புழல், கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட ஒன்பது இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. தவிர, பெண் கைதிகளுக்கென சென்னை(புழல்), வேலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தனிச் சிறைகள் செயல்படுகின்றன. அனைத்து மத்திய சிறைகளிலும் மொத்தம் 22 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நல்வாழ்வுக்காக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த நட்ராஜ், ஃபிரீடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் மூலம் சிறைக்கைதிகள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை வெளிச் சந்தையில் விற்று லாபம் பார்க்கவும், அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பங்கை கைதிகளின் கணக்கில் வரவு வைக்கவும் உத்தரவிட்டார் நட்ராஜ். நீண்டகாலமாக சிறையில் வாடும் கைதிகள், இந்த உத்தரவின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

துணி தைப்பது, காலணி உற்பத்தி, மெழுகுவர்த்தி தயாரிப்பு, பாண்டேஜ், குழந்தைகள் நாப்கின், இனிப்பு, கார வகைகள், இயற்கை காய்கறி, கீரை, தச்சு வேலைகள், சலூன் கடை, பினாயில் தயாரிப்பு என சிறை வளாகங்கள் அனைத்தும் உற்பத்திக் கூடங்களாக மாறின. அதிலும் தீபாவளி, கிறிஸ்துமல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைதிகளின் இனிப்பு தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ' கடந்த ஓரிரு நாட்களாக ஃப்ரீடம் கடைகள் செயல்படவில்லை. 'இனி சிறையில் யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை' என்று கூறி ஐந்தாயிரம் கைதிகளை செல்லுக்குள் வைத்து அடைத்துவிட்டனர். இப்போது யாரும் வேலை செய்வதில்லை' என அதிர வைத்தார் சிறைத்துறை அதிகாரி ஒருவர்.

 

'ஃப்ரீடம்'  அமைப்பில் நடந்த முறைகேடுகளையும் நம்மிடம் அவர் பட்டியலிட்டார்.

" ஃபிரீடம் அமைப்பின் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான செலவை சிறை நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அதன்மூலம் வாங்கப்படும் மூலப் பொருட்களை வைத்து உற்பத்தியும் நடந்து வந்தது. கைதிகள் தயாரிக்கும் பேக்கரி, காலணி, பாண்டேஜ் உள்ளிட்ட பொருட்களுக்கு வெளிச்சந்தையில் நல்ல லாபம் கிடைத்து வந்தது. ஒட்டுமொத்த வரவையும் லாபம் எனக் கருதி டி.ஐ.ஜி முதல் வார்டன் வரையில் அனைவரும் கமிஷன் எடுத்துக் கொண்டார்கள். உற்பத்தியில் கிடைக்கும் வருவாயில், முதலீட்டை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாததன் விளைவுதான் கடைகளைப் பூட்டும் நிலைமைக்குக் கொண்டு போய்விட்டது.

தவிர, நன்றாக வேலை தெரிந்த ஒருவருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் கூலி  வழங்க வேண்டும் என விதி உள்ளது. இதில், ஐம்பது சதவீதம்,  கைதிகளின் உணவு மற்றும் பராமரிப்புச் செலவாகவும், கைதி செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதத் தொகை கைதியின் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது. அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை உள்ளது. ஆனால், கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இதற்காக சேர்ந்த தொகை மட்டுமே பத்து கோடியைத் தாண்டும். இந்தப் பணம் என்ன ஆனது? என்றே தெரியவில்லை. முறையான கணக்கு வழக்கும் இல்லை. கைதிகளுக்கான உணவை அரசு வழங்குகிறது. ஆனால், கைதிகள் உழைப்பில் உணவுக்கென்று ஐம்பது சதவீதத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஃபிரீடம் அங்காடிகள் மூலம் விற்கப்படும் பொருட்களுக்கு நல்ல லாபமும் கிடைத்து வந்தது. கடந்த ஆறு மாதங்களாகவே பேக்கரி, ஷூ தயாரிப்பு, பெல்ட் தயாரிப்பு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட மற்ற வேலைகள் செய்யும் கைதிகளுக்கு சம்பளமே தரவில்லை. எட்டு மணி நேர வேலை என அரசின் தொழில் கொள்கை இருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் இரவு பத்து மணிக்குத்தான் கைதிகள் தூங்கவே செல்கிறார்கள். ' கடந்த சில நாட்களாக பிளாக்குகளை விட்டு வெளியே வர வேண்டாம்' என அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். இதனால் வேலைக்குப் போகாமல் செல்லுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். ஃபிரீடம் அங்காடிகள் மூலம் மாதம் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் கமிஷனாகக் கொள்ளை அடிக்கிறார்கள்" என்றார் அந்த அதிகாரி மிகுந்த வேதனையோடு.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர்.புகழேந்தி, " சிறைத்துறை டி.ஜி.பியாக ஜார்ஜ் பதவியேற்ற பிறகுதான் இத்தனையும் நடந்திருக்கிறது. திரிபாதி தலைவராக இருந்தபோது ஃபிரீடம் அமைப்பை விரிவுபடுத்தினார். கைதிகளின் உழைப்பிற்கு உரிய மரியாதையும் கிடைத்து வந்தது. ஜார்ஜ் பதவியேற்ற பிறகு சிறை அதிகாரிகளை அழைத்து மீட்டிங் போடுவது, கண்காணிப்பது என எந்த வேலையையும் செய்யவில்லை.

மன அழுத்தத்தில் இருந்து கைதிகளை விடுவிக்கும் முயற்சியாகத்தான் தொழிற் கூடங்கள் அமைக்கப்பட்டன. இப்போது ஒரேயடியாக அவர்களை பூட்டி வைத்துவிட்டனர். இதனால் மனதளவில் அவர்கள் சோர்ந்து போகவே வாய்ப்பு அதிகம். ஃபிரீடம் அங்காடிகளில் மட்டும் ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்திருக்கிறது. இதுதொடர்பாக, கைதிகளிடம் விவாதித்துவிட்டு சட்டரீதியாக வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறேன்" என்றார்.

ஊழல் செய்தவர்களை சிறையில் அடைக்கிறார்கள். சிறைக்குள்ளேயே ஊழல் நடந்தால், சிறை அதிகாரிகளை எந்த சிறையில் அடைப்பது?

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ