Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..!' என்கிறார் கருணாநிதி

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிறுதாவூர் அரண்மனையில் இருந்த கன்டெய்னர்கள் பற்றி கடந்த மாதமே எல்லா ஏடுகளிலும் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பியதாகவும், அதன்படி கன்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு உண்மையை மூடிப் புதைத்து விட்டார்கள். மாவட்ட ஆட்சியரோ, காவல் துறை கண்காணிப்பாளரோ சோதனையிடவே செல்லவில்லை என்பது தான் பிறகு வெளிச்சத்திற்கு வந்த செய்தி.

அதற்குப் பிறகு கரூர் அருகில் நத்தம் விசுவநாதன் மற்றும் இரண்டு மூன்று அமைச்சர்களின் நெருங்கிய நண்பர் அன்புநாதன் பற்றியும், அவர் வீட்டில் நடந்த சோதனை பற்றியும் பக்கம் பக்கமாகச் செய்திகள் வந்தன. அன்புநாதன் வீட்டிற்கு எந்தெந்த அமைச்சர்கள் வந்தார்கள், சட்ட விரோதமாக என்னென்ன சம்பவங்கள் அங்கே நடைபெற்றன என்பது பற்றி எல்லாம் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட காமராவைப் பார்த்தால் எல்லாம் வெளி உலகத்திற்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும் என்று சொல்லப்பட்டது. பிறகு பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தக் காமரா என்னவாயிற்று என்றோ, அந்த சோதனையின் விளைவு என்ன என்றோ எந்த விபரமும் தெரியவில்லை. அந்த அன்புநாதன் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, மதுரை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுக் கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை முடிக்க எங்கோ போய் விட்டார்.

தற்போது திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டுபோனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? இதுவும் கன்டெய்னர்களில் தான் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதுவும் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் கண்காணிப்பு நிலைக் குழு அலுவலர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட பறக்கும் படையினர் துணை ராணுவத் தினருடன் பெருமாநல்லூர்-குன்னத்தூர் செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தான் இந்த மூன்று கன்டெய்னர்களும் வந்திருக்கின்றன. அதைப் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, நிற்க வில்லை. இருந்தாலும் அந்த வண்டிகளை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் சென்று விசாரித்தபோது விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கிக்கு 570 கோடி ரூபாயைக் கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு பெரும் தொகை எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது? 570 கோடி ரூபாயை, மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு உள்ள மிகப் பெருந்தொகையை எந்த ஒரு வங்கியிலாவது வைத்திருக்க முடியுமா? 570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவைப்படுமா? மூன்று கன்டெய்னர்களிலும் இருந்த பணம் முறையாக, அதிகாரம் பெற்ற அலுவலரால் எண்ணப்பட்டதா? ஒரு வங்கியிலே எவ்வளவு பணத்தை ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதி இருக்கிறதா இல்லையா? ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பெரும் தொகையை எடுத்துச் செல்ல என்ன காரணம்? அந்த வண்டியிலே எந்த உரிய ஆவணங்களும் இல்லையே? ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்றால், பறக்கும் படையினர் வண்டியை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றதற்கு என்ன காரணம்?

தவறான வழிகளில் சேர்ந்த பணம் என்பதால் தானே கன்டெய்னர்களை நிறுத்தாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். வண்டியில் ஏதோ ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காட்டினார்களாம். அந்த நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் உள்ளனவே! உண்மை நகல்கள் எங்கே? இவ்வளவு பணம் எடுத்துச் சென்றால் அது உண்மையான நேர்மையான நோக்கத்திற்கான பணமாக இருந்தால், இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். அப்படி எந்த இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லையாம். ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும், 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. அப்படி இருக்கும்போது 570 கோடி ரூபாயைக் கொண்டு சென்றபோது, லுங்கி அணிந்த காவல் துறையினரை எப்படி அழைத்துச் சென்றார்கள்?

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பணத்தை அனுப்புவது என்றால், அந்தப் பணத்திற்கும், கன்டெய்னருக்கும் “சீல்” வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அப்படி எதுவும் வைக்கப்படவில்லையே? இந்தப் பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்? இவ்வளவு பெரிய தொகையை விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று எடுத்துச் சென்றதற்கு என்ன காரணம்? எந்த வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லப்படுகிறதோ அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் ஒருவர் கன்டெய்னருடன் செல்ல வேண்டாமா? திருப்பூரில் பணம் பிடிபட்டு 18 மணி நேரம் கழித்தே, கோவை வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோருகிறார்கள் என்றால், அபரிமிதமான இந்தத் தாமதத்திற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பணம் கடத்தப்பட்டபோது உண்மையான விவரங்கள் என்ன என்பது பற்றி இதுவரை தமிழகத்திலே அரசின் சார்பில் யாரும் எந்த விவரமும் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்தே முறையான வழியில் வந்த நேர்மையான பணம் அல்ல என்பது உறுதியாகிறது அல்லவா?

தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, மத்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டதால் தான், வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே; இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close