Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.570 கோடி பறிமுதல் விவகாரம்:சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

திருப்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திருப்பூர் அருகே கன்ட்டெய்னரில் பிடிபட்ட  ரூ.570 கோடி தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வேண்டுகோளை உச்ச நீதிமன்றம்  ஏற்க மறுத்து,  சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்று கூறியுள்ளது.

கடந்த 14-ம் தேதியன்று திருப்பூர் அருகே ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கன்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை பிடிபட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் உரிய விசாரணையை உடனே நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வந்தனர்.   

இதுகுறித்து தேர்தல் பார்வையாளர், வருமானவரித்துறை அதிகாரி, தேர்தல் அதிகாரி ஆகிய 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. பிடிபட்ட ரூ.570 கோடி தங்கள் பணம் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி முறையிட்டார்.

அதில், 'திருப்பூர் அருகே ரூ.570 கோடி 3 கன்டெய்னர்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் கூட இதுபற்றி எந்த கருத்தும் வெளியிடாமல் இருப்பது இது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிக்கிறது.

இந்தப் பெரிய தொகை கைப்பற்றப்பட்டு 3 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட துறைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மர்மம் அப்படியே நீடித்து வருகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து விரிவான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும" என்று கூறியிருந்தார் 

இதனையடுத்து நீதிபதிகள், ‘இந்த சம்பவம் தமிழ் நாட்டுக்குள் நடைபெற்று இருப்பதால் இதுபற்றி சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகி அங்கே மனு தாக்கல் செய்யலாம்’ என்று தெரிவித்தனர்.

அதற்கு கிருஷ்ணமூர்த்தி, ‘இது தமிழ்நாட்டில் நடந்ததுடன், இந்த பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்வதாக கூறியதால் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகிறது. எனவே உச்சநீதிமன்றம்  விசாரிப்பது முறையாக இருக்கும்’ என்று வலியுறுத்தினார்.

அதற்கு நீதிபதிகள், ‘சம்பவத்தில் தொடர்புடைய கன்ட்டெய்னர்  தமிழ்நாட்டுக்குள் கைப்பற்றப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ