Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேர்வில் தோற்றவர்களை வாழ்த்துகிறேன்!' - கோவை கமிஷனரின் ஃபேஸ்புக் மெசேஜ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. வெற்றி பெற்றவர்களைவிட தோல்வி அடைந்தவர்களுக்கான ஆறுதல்கள் பல தரப்பில் இருந்தும் முன்வைக்கப்படுகின்றன. காரணம், தோல்வி தரும் அதிர்ச்சியில், தற்கொலை முடிவை நோக்கி மாணவர்கள் தள்ளப்படுவதுதான். தற்கொலை விகிதங்களின் புள்ளிவிபரங்களைப் பார்த்துக் கலவரப்படுகிறார்கள் கல்வியாளர்கள். இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே, மாணவர்களை மனதளவில் தயார்படுத்தும் முயற்சியில் கல்வி அதிகாரிகள் இறங்கினர்.

இன்று காலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான நேரத்தில், கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ' வெற்றியோ தோல்வியோ, மத்தவங்களோட கம்பேர் பண்ணாம நமக்கு சரிங்கிற பாதையை மட்டும் தேர்வு செய்துட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். வெற்றியை மட்டும் தேடிப் போறவுங்களுக்கு வாழ்க்கையை பிடிக்காமல் போகலாம்.

ஆனால், பிடித்த வாழ்க்கையைத் தேடிப் போகின்றவர்களை வெற்றிக்கு நிச்சயம் பிடிக்கும். Topper u , pass u , just Pass u , fail u , detain u ஆன அனைவருக்கும் தங்களின் அடுத்தடுத்த படிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!' எனக் குறிப்பிட்டிருந்தார். தேர்வில் தோற்றவர்களின் மனதிற்கு உற்சாகம் அளிக்கக் கூடிய இந்த வரிகள், இணைய உலகில் வைரலாகிறது.

விஜய் கார்த்திகேயன் குறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், "மாணவர்கள் இருக்கும் இடங்களைத் தேடிப் போய் பேசுவார். அவருடைய மோட்டிவேஷனல் பேச்சைக் கேட்கவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏராளமான வழிகாட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இவருடைய தந்தை கண்ணன், வனத்துறையில் தலைமை வனப்பாதுகாவலராக இருக்கிறார்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று, சப்-கலெக்டராக பணியாற்றியபோது,  கோவில்பட்டியில் பட்டா இல்லாத மக்களுக்கு, ஒரே நாளில் பட்டா வழங்கினார். இப்போது கோவையில் உள்ள குளங்களைத் தூர்வாருவதற்காக மிகப் பெரிய திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் இருக்கும் இடத்தில் தன்னம்பிக்கைக்கும் உற்சாகத்திற்கும் குறைவிருக்காது" என நெகிழ்ந்தார்.

வெல்டன் விஜய் கார்த்திகேயன்...!  

ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ