Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாம் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களை புரட்டிப்போட்டது. மழைக்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள அரசும் பொதுமக்களும் எடுக்காததால் சில உயிரிழப்புக்களையும், பலர் பொருட்களையும் தங்களின் உடமைகளையும் இழந்து நின்ற சோகம் ஏற்பட்டது.

அந்த வடுவின் தாக்கம் மாறுவதற்குள், தற்போது சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது இன்று (18.05.2016) காலை சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகுந்த கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேக காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

* நமக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

* சுத்தமான காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும்.

* உணவு பொருட்களை மூடியே வைத்திருக்க வேண்டும்.

* வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளம் (roof) உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* டார்ச் லைட், தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தியை நம் கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

* சார்ஜ் செய்ய வேண்டிய பொருட்களை செல்போன், டேப், லேப் டப் போன்றவற்றை மின்சாரம் இருக்கும்போதே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் மழை மற்று பருவநிலை பற்றி சொல்லப்படும் செய்திகளை தவறாமல் கேட்க வேண்டும்.

* மழை நீரில் ஈரமாகி இருக்கும் மின்சாதன பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

* மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் வெளியே அதிகம் செல்வதை தவிர்த்து, வீட்டில் பாதுகாப்பான இடத்தில் இருப்பது நல்லது.

* மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் இடங்களில், அந்த மழை நீரில் நடக்காமலோ, பயணிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

* அதிகமாக மழை நீர் தேங்கி இருக்கும் சாலையில் டூவீலர் மற்றும் கார்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

* முக்கியமாக தேங்கி நிற்கும் மழை நீரில் நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

* அறுந்து விழுந்து கிடக்கும் மின் வயர்கள், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் சாலையோரத்தில் திறந்து கிடக்கும் மின்சாரப் பெட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம்.

மேலும்,  மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற எண்ணைத்தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும்,  சென்னையில் ஏற்படும் வெள்ளபாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ