Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு... தமிழகத்தில் மழை குறையும்! -வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வனிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறும்போது, ''தற்போது சென்னையில் இருந்து கிழக்கே 90 கி.மீ. தொலைவுக்கு தாழ்வு மண்டலம் நெருங்கியுள்ளது. வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 11.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல் மீனம்பாக்கத்தில் 11 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ., தரமணி 7.7 செ.மீ., செம்பரம்பாக்கம் 7.5 செ.மீ., எண்ணூர் 6.7 செ.மீ.,திருவள்ளூர் 6.4 செ.மீ., புழல் 5.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது" என்றார்.

சென்னையில் நேற்று முதல் விடிய விடிய தொடர் மழை பெய்து வருவதால் அடையாறு,திருவான்மியூர், பாரிமுனை, ஈக்காட்டுத்தாங்கல், நீலாங்கரை, வேளச்சேரி, திருவெல்லிக்கேணி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேரிடர் மீட்புக்குழுினரும் மாநகராட்சிக்கு துணையாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். சென்னையில் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற பம்புசெட்டுகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற உதவி எண்ணிலும் 1913 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 72 பேர் கொண்ட 6 பேரிடர் மீட்புக்குழுவினர் படகுகளுடன் அரக்கோணத்தில் இருந்து  சென்னை வந்துள்ளனர்.

சென்னை அடையாறில் 3 குழுவும், மணலியில் 3 குழுவும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 25 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ