Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சேதமடையும் முன் எங்கள் படகுகளை மீட்டுத் தாருங்கள்..!' -தமிழக மீனவர்கள் கோரிக்கை

ராமேஸ்வரம்: இலங்கை வசம் உள்ள எங்கள் படகுகள் சேதமடையும் முன் மீட்டுத் தாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்களது விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சிறை பிடித்து செல்வது வழக்கம். இவ்வாறு படகுகளை சிறை பிடிக்கும்போது அதில் உள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்துவதை தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மட்டும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். இதன் தொடர்ச்சியாக மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.

சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் மன்னார், காங்கேசன்துறை, ஊர்காவல்துறை பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 99 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் தரப்பில் பல போராட்டங்கள் நடத்தியும் பலன் ஏதும் கிட்டவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, அங்கு வந்த அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜாவின் கார் சேதப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் டெல்லி வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம், இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 34 மீனவர்கள் கடந்த் இரு நாட்களுக்கு முன் விடுக்கப்பட்டனர். ஆனால் படகுகளை விடுவிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், இலங்கையில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இலங்கை மன்னார் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் கடல் கொந்தளிப்பில் சிக்கி சேதமடைந்து உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகளில் 18 படகுகள் சுனாமியில் சிக்கி முற்றிலும் மூழ்கி போகின.

அதே போன்ற நிலை தற்போது உள்ள் 99 படகுகளுக்கும் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவை சேதமடையும் முன் தமிழகத்திற்கு மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ