Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கரூர்: அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல், வருகின்ற 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வருகின்ற 21-ம் தேதி வரை இந்த 2 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க.வினர் நேற்று காலை முதல் இரவு வரை தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியும் பள்ளப்பட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தில், நேற்று இரவு மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் அலறியபடி வெளியே ஒடி வந்தனர்.

அதற்குள் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட, இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான சையத் இப்ராஹிம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்று கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்