Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

12 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம் பிடித்த ராமநாதபுரம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம்  தொகுதி 12 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

முன்பெல்லாம் தண்ணியில்லா காடு எனவும், தண்டனை பகுதி எனவும் அழைக்கப்பட்டு வந்தது மாவட்டம் ராமநாதபுரம். அந்த மாவட்டத்தின் தலைநகராக இருப்பது ராமநாதபுரம் தொகுதி. மீன்பிடித்தலையும், சுற்றுலாவையும் பிரதான தொழில்களாக கொண்டிருக்கும் ராமநாதபுரம் தொகுதியில் சொல்லி கொள்ளும்படியான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.

இதனால் பெரும்பகுதியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தும், வெளிநாடுகளையும், வெளிமாநிலங்களையும் நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் ஜெயிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்பது தேர்தல் காலங்களில் மக்களிடையே வலம் வரும் நம்பிக்கை.

அனைத்தும் சேர்ந்த மீனவர்கள் நிறைந்த தொகுதி ராமநாதபுரம். 1952-ல் நடந்த முதல் பொது தேர்தலில் ராமநாதபுரம் மன்னராக இருந்த சண்முகராஜேஸ்வர சேதுபதி மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே மன்னரை தோற்கடித்த பெருமையும் கொண்டவர்கள் இத்தொகுதி வாக்காளர்கள்.

3 முறை இந்திய தேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த மன்னர் சண்முகராஜேஸ்வர சேதுபதியை 1967 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட எளியவர் தங்கப்பன் தோற்கடித்தார். 1971 தேர்தலில் தி.மு.க.வின் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் வென்றார். அவரை தொடர்ந்து தங்கப்பனின் சகோதரர் டி.ராமசாமி 1977 தேர்தல் துவங்கி 3 முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என கை மாறி வந்த ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார்.

இம்முறை தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாவை அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் மணிகண்டன் 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த சாதனையை பெருமைபடுத்தும் வகையில் மருத்துவர் மணிகண்டனுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இதுவரை நடைபெற்ற 15 சட்ட மன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 5 பேர் மட்டுமே அமைச்சர் பதவி வகித்துள்ளார்கள். இவர்கள் தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி மற்றும் பரமக்குடி தொகுதிகளில் வெற்றி பெற்ற இருவரும் அமைச்சர் பதவி வகித்துள்ளார்கள். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமைச்சர் பதவியை பிடித்திருக்கிறது ராமநாதபுரம் தொகுதி.

1957-ம் ஆண்டு நடந்த 2-வது சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றவர் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் சண்முகராஜேஸ்வர சேதுபதி. அப்போது அமைந்த ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக சண்முகராஜேஸ்வர சேதுபதி நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் ராமநாதபுரம் தொகுதி முதன் முதலாக அமைச்சர் பதவியை பெற்றது. சில ஆண்டுகளுக்கு பின் பொதுப்பணி துறை அமைச்சராக பதவி வகித்தார் சண்முகராஜேஸ்வர சேதுபதி. இவரது பதவி காலத்தில்தான் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளில் சிறு சிறு அணைகள் கட்டப்பட்டன.

இதன் பின் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதிக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1977 முதல் ராமநாதபுரம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வென்ற அ.தி.மு.க.வின் டி.ராமசாமிக்கு முதலில் அகதிகள் மறுவாழ்வு துறையும் பின்னர் வணிகவரி துறையும் வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுமையும் ஓரளவு அடிப்படை வசதிகளை பெற்றன. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் நடந்த தேர்தலில் வென்ற தி.மு.க, ராமநாதபுரம் தொகுதியில் வென்ற தனது கட்சியை சேர்ந்த எம்.எஸ்.கே.ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை.
 
பின்னர் 1991 தேர்தலில் வென்ற அ.தி.மு.க.வின் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ராமநாதபுரம் தொகுதியில் வென்ற மு.தென்னவன் இடம் பெற்றார். அடுத்து வந்த 1996 தேர்தலில் ராமநாதபுரத்தில் வென்ற தி.மு.க வேட்பாளர் ரகுமான்கானுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இதன் பின் நடந்த 2001 தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த அ.தி.மு.க அமைச்சரவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான அன்வர்ராஜாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், இந்த பதவி ஆட்சி காலம் முழுவதும் நீடிக்கவில்லை. அமைச்சரவையில் இருந்து அன்வர்ராஜா இடையிலேயே நீக்கப்பட்டார். அப்போது ராமநாதபுரம் தொகுதியை விட்டு போன அமைச்சர் வாய்ப்பு பின்னர் வந்த 2 தேர்தல்களிலும் கிடைக்கவில்லை.

அதற்கு காரணம் 2006 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸின் அசன் அலி இங்கு வென்ற போதும் அமைச்சராக முடியவில்லை. இதேபோல் 2011 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜவாஹிருல்லா வென்ற போதிலும் அமைச்சராவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இப்படி தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக அமைச்சரவையில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் தொகுதி தற்போதைய அ.தி.மு.க.வின் வெற்றியால் அமைச்சர் தொகுதி என்ற நிலையினை மீண்டும் அடைந்திருக்கிறது.

இங்கு வெற்றி பெற்ற மருத்துவர் மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி இன்றி கிடத்ந்த ராமநாதபுரம் மீண்டும் வளர்ச்சியை நோக்கி செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close