Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதாவும், 28 புதிய அமைச்சர்களும் இன்று பதவியேற்பு!

சென்னை: தமிழக முதலமைச்சராக ஜெயலலிதாவும், 28 புதிய அமைச்சர்களும் இன்று பதவி ஏற்க உள்ளனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 20–ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கவர்னரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று பகல் 12 மணிக்கு கோலாகலமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். ஜெயலலிதா தனது அமைச்சரவையில், 28 அமைச்சர்களை நியமித்து உள்ளார். அவர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதால், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்பார் என கூறப்படுகிறது. மேலும், இந்த பதவியேற்பு விழாவில், அண்டை மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய-மாநில கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பதவி ஏற்பு விழா நிறைவடைந்ததும், மதியம் 12.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்கிறார். அங்கு, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. அங்கு, முதலமைச்சர் ஜெயலலிதாவை புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர். தனது அறைக்கு சென்று பணியை தொடங்கும் முதல்வர் ஜெயலலிதா, 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கும், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பிலும் அவர் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.



அதன் பின்னர் போயஸ் கார்டன் திரும்பும் முதல்வர், மதியம் 1.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின் கூடும் சட்டசபை கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை, புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். அதற்கான தேதியும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

பதவி ஏற்பு நிகழ்ச்சியையொட்டி, பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பதவி ஏற்பு நிகழ்ச்சியினை பொதுமக்கள் காணும் வகையில், பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி 12 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைத்து மாவட்டங்களில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண, செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- படம்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ