Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி

 

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.

அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது வரைமுறையின்றி வைக்கப்பட்ட கட் அவுட்டுகள்தான். தேர்தல் முடிவில் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அ.தி.மு.கவின் தோல்விக்கு மழைவெள்ளம் உருவாக்கிய சேதம் பிரதான காரணமாக இருந்தாலும், மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்குக் கெட்ட பெயரை உருவாக்கிக் கொடுத்தது பேனர் கலாச்சாரம்தான்.
 

அதிலும், திருவான்மியூரில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் வைத்த கட்அவுட்டுகளால் அடிதடி தகராறு வரை நீண்டது. இந்த சம்பவத்தில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் பேனர்களைக் கிழிக்கப் போக, காவல்துறை வரையில் பஞ்சாயத்து நீண்டது. அதேபோல், புரசைவாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த  அ.தி.மு.கவின் பேனர்களை சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி கிழிக்கப்போக, அ.தி.மு.கவினர் அவரோடு சண்டை போட்டனர். முடிவில், ட்ராபிக் ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்து நள்ளிரவில் கைது செய்தது போலீஸ்.

கடந்த ஆட்சியில் முதல்வர் செல்லும் வழியெங்கும் வாழை மரங்கள், தோரணங்கள், பேனர்கள், ஆளுயர கட்அவுட்டுகள் என அ.தி.மு.க நிர்வாகிகள் அதகளப்படுத்தினர். விதிமுறையின்றி வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. இந்நிலையில், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடந்த 21-ம் தேதி மாலை போட வந்தார்.

அப்போதும் சாலையில் எந்த கட்அவுட்டையும் பார்க்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி தடுப்பு வேலியை மட்டும் போலீஸார் அமைத்திருந்தார்கள். 'முதல்வர் வரப் போகிறார்' என்பதை நினைவூட்டும் வகையிலேயே இருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் ஜெயலலிதா. விழா நடக்கும் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் வரையிலும் பேனர், கட்அவுட் என எதுவுமே கண்ணில் தென்படவில்லை. அ.தி.மு.கவின் இந்த அணுகுமுறையை சென்னைவாசிகள் அதிசயத்தோடு பார்த்துச் செல்கிறார்கள்.

இதுபற்றி அ.தி.மு.கவின் தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம். " உண்மைதான். அம்மா பங்கேற்க வரும் நிகழ்வுகளில் கட்சிக்காரர்கள் விதிமுறைகளை மீறி கட்அவுட் வைப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் எழுந்தன. அதிகப்படியான பேனர்களை வைப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்று, எதிரிகள் இதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர். எனவே, 'வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க வேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான் நிர்வாகிகள் பின்பற்றுகிறார்கள்" என்றார்.

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், ' மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கருத்தை அடிநாதமாக முழங்கினார் ஜெயலலிதா. ஆட்சியின் தொடக்கத்திலேயே அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல முன்னேற்றம்தான்.

ஆ.விஜயானந்த்
- படம்: ஆ.முத்துக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close